பம்பா: சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் தளர்வுகளை தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, கடந்த 15ம் தேதி திறக்கப்பட்டது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நாள்தோறும் 45 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.  இதற்காக  “வெர்ச்சுவல் க்யூ” மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘

இதனால், பக்தர்கள் பலமணி நேரம் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து மேலும் பல தளர்வுகளை தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. அதன்படி, பக்தர்கள் சன்னிதானத்தில் பக்தர்களுக்கு இரவு தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  அங்குள்ள தங்கும் விடுதிகளில் 500 அறைகள் தயார்படுப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பக்தர்கள்  பம்பை ஆற்றில்  குளிக்கவும், சன்னிதானத்தில் செல்லும் பாரம்பரிய வன பாதை நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் பாதை வழியாக மலை ஏறவும் அனுமதி  வழங்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த பாதைகளில் அவசர சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

டிசம்பர் 26ம் தேதியோடு மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும். பிறகு டிசம்பர்  30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 2022ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படும்.