பெங்களூரு:

ர்நாடகாவில் வரும் 12ந்தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்நிலையில், கர்நாடகா தேர்தலில் முழுமையான அளவில் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும்,  வாக்களிக்கும் பெற்றோர்களின்  குழந்தைகளுக்கு 4 மதிப்பெண்கள் வழங்க அம்மாநில ஆங்கில மொழிவழி பள்ளி மேலாண்மைக் கழகம் முடிவு செய்துள்ளது.

வாக்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பள்ளி நிர்வாகங்களும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வாக்களிப்பது ஜனநாய கடமை என்றும், வாக்குரிமை உள்ளவர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

இதையொட்டி, பெற்றோர்களை வாக்களிக்க வலியுறுத்தும் வகையில், மாணவர்களுக்கு 4 சிறப்பு மதிப்பெண்கள் வழங்க  மாநில ஆங்கில மொழிவழி பள்ளி மேலாண்மைக் கழகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பெற்றோர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களித்த பெற்றோர்கள் விரலில் வைக்கப்பட்ட மையை பள்ளியில் காண்பிக்க வேண்டும். இதில் தாய் தந்தை இருவரும் காட்டினால் 4 மதிப்பெண்கள் என்றும், ஒருவர் மட்டுமே காண்பித்தால் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், இதன் காரணமாக   குழந்தைகள் பெற்றோர்களை வாக்களிக்க வலியுறுத்துவார்கள் என்று கருதி இந்த புதிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கர்நாடகா மாநில ஆங்கில மொழிவழி பள்ளி மேலாண்மை கழக பொதுச்செயலாளர் ஷஷி குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் தங்களின் இந்த செயல்  அரசியல் கட்சிகளுக்கான ஆதரவு இல்லை என்றும்,  வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலே இதை அறிவித்து உள்ளதாகவும்,  அதுபோல வாக்களித்த பெற்றோர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கவும் தீர்மானித்துள்ளோம் என்று கூறி உள்ளார்.

ஏற்கனவே நடைபெற்ற ஒரு தேர்தலின்போது இது சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், அப்போது இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் காரணமாகவே தற்போது எங்களது அமைப்பில் உள்ள 3 ஆயிரம் பள்ளிகள் மூலம் இந்த விழிப்புணர்வு  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.