டெல்லி: மக்களவையில் தான் பேசிய கருத்துக்களை நீக்கியது ஜனநாயகத்துக்கு எதிரானது, அதை மீண்டும் சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சபாநயகருக்கு கடிதம் எழுதி உள்ளார். “பிரதமர் மோடியின் உலகில் உண்மையை அழிக்கலாம். அதனை மூடி மறைக்கலாம். ஆனால், எதார்த்த உலகில் அப்படி அல்ல. உண்மையை ஒருபோதும் அழிக்க முடியாது என்றும் விமர்சித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, இந்துக்கள் வன்முறையாளர்கள் என கூறினார். அவரது இந்த கருத்து நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, இந்துக்களை தொடர்புபடுத்தி ராகுல்காந்தி பேசியது பேச்சுக்கள் அனைத்தும், சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதுபோல அக்னிவீர் திட்டம் பற்றி அவர் குறை கூறி இருக்கும் பகுதியும் நீக்கப்பட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “மக்களவை நடைமுறை மற்றும் நடத்தை விதிகள் 380-இல் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளை நீக்குவதற்கான அதிகாரங்களை அவைத் தலைவர் பெறுகிறார். இத்தகைய சூழலில், எனது உரையின் கணிசமான பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
நீக்கப்பட்ட வார்த்தைகள் விதி 380-இன் கீழ் வராது என்பதை கூற விரும்புகிறேன். கள நிலவரத்தையும் உண்மையையுமே இந்த அவையில் தெரிவிக்க விரும்புகிறேன். மக்களின் குரலாக ஒவ்வொரு உறுப்பினரும் இந்திய அரசியலமைப்பின் 105(1) வது பிரிவின் கீழ் அவையில் பேச சுதந்திரம் உள்ளது.
மக்கள் பிரச்னைகளை அவையில் எழுப்புவது ஒவ்வொரு உறுப்பினரின் உரிமை. அந்த உரிமையையும், நாட்டு மக்களுக்கு நான் ஆற்ற வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் செயலிலேயே நேற்று நான் ஈடுபட்டேன். எனது கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது.
இந்த தருணத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குரின் பேச்சை குறிப்பிட விரும்புகிறேன். அவரின் பேச்சுகள் முழுவதிலும் குற்றச்சாட்டுகள் நிறைந்து இருந்த நிலையில், ஒரே ஒரு வார்த்தை மட்டும் நீக்கப்பட்டதை கண்டு ஆச்சரியமடைந்தேன். அவை நடவடிக்கையில் இருந்து நீக்கப்பட்ட எனது கருத்துகளை மீண்டும் சேர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிம் பேசிய ராகுல், “பிரதமர் மோடியின் உலகில் உண்மையை அழிக்கலாம். அதனை மூடி மறைக்கலாம். ஆனால், எதார்த்த உலகில் அப்படி அல்ல. உண்மையை ஒருபோதும் அழிக்க முடியாது.
எதைச் சொல்ல வேண்டுமென நான் நினைத்தேனோ அதைத் தான் சொன்னேன். அது தான் உண்மையும் கூட. அவர்களுக்கு வேண்டிய வரையில் எதை வேண்டுமானாலும் அழிக்கலாம். ஆனால், உண்மை உண்மை தான்” என கூறினார்.