திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், பயணிகள் மாற்று ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், அந்த வழியாக செல்லும் 18 ரயில்களின் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578) அக்டோபர் 11ந்தேதி இரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், 6 பெட்டிகள் தரம் புரண்டதில் இரு ஏசி பெட்டிகள் தீப்பற்றி எரிந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டனர். இந்த ரயிலில் பயணித்தோர் பெரும்பாலானோர் வடமாநிலத்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளன. இந்த விபத்தில் சிலருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. மேலும், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் கொண்ட குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு பயணிகளை அப்புறப்படுத்தினர். அதுமட்டுமின்றி சென்னை சென்ட்ரலில் இருந்தும் மருத்துவ வேன் மற்றும் மீட்புக்குழுவினர் விபத்து நடந்த இடத்தில் பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் ரயில்பெட்டிகளை அகற்றும் பணிகள் முடிவடைந்த பின்னர் இந்த பாதையில் ரயில் போக்குவரத்து சீரடைந்து வருகிறது. முழுமையாக . அதன்பிறகே அந்த பாதையில் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பத்து உள்ளது.
இந்த நிலையில், கவரைப்பேட்டையில் ஏற்பட்ட ரெயில் விபத்து காரணமாக 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் அனைத்து ரெயில்களும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அரக்கோணத்திலிருந்து புதுச்சேரி செல்லும் எம்இஎம்யூ ரெயில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சூளூர்பேட்லை நெல்லூர் வழித்தடத்தில் இயக்கப்படும் எம்இஎம்யூ ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விஜயவாடா- சென்ட்ரல் வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் உதவி எண்கள் அறிவித்தது. இந்த ரயில் விபத்தில் சிக்கிய தவிக்கும் பயணிகளுக்கு உதவி மைய எண்களை சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது. அதன்படி பயணிகள் 044 25354151, 044 24354995 என்ற இரு எண்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை கோரலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் சமீப காலமாக ரயில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. 2023, கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில், 293 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி, ஆந்திர பிரதேசம் விழியநகரத்தில் நடத்த ரயில் விபத்தில் 14 பேர் மரணம் அடைந்தனர். இந்த விபத்து நடப்பதற்கு 12 நாள்களுக்கு முன்புதான், பிகார் பக்சர் மாவட்டத்தில் நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளாகி 4 பேரின் உயிரை காவு வாங்கியது. இறப்புகள் ஏற்படாத ரயில் விபத்துகள் பல கடந்தாண்டு நிகழ்ந்துள்ளது. அதைத்தொடர்ந்து பல இடங்களில் ரயிலை கவிழ்க்க நடந்த சதிகள் முறியடிக்கப்பட்டன. மேலும் ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர், இரும்பு கம்பிகளை வைத்து சிலர் ரயில் விபத்துக்களை ஏற்படுத்த முனைந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.