டில்லி
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பால் பொருட்கள் 127% உயர்ந்து 1,23,877 மில்லியன் டன்கள் ஆகி உள்ளன.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவது குறைந்து வருவதாகப் பலரும் கூறி வருகின்றனர். இதனால் பல தொழில்கள் பாதிப்பு அடைந்துள்ளன. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பாலில் இருந்து தயாராகும் பொருட்கள் அதிக அளவில் உள்ளன. அவை ஆடை எடுக்கப்பட்ட பால் பவுடர், வெண்ணெய், நெய், சீஸ், கிரீம், தயிர் போன்றவை ஆகும். இந்தியப் பால் பொருட்களுக்கு அரபு அமீரகம், எகிப்து, வங்கதேசம் மற்றும் பூட்டான் உள்ளிட்ட நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.
கடந்த 2018-19 ஆம் ஆண்டு 126% அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த ஏற்றுமதி 52,828 மில்லியன் டன்களாக இருந்தது. இது சென்ற ஆண்டு 1,23,877 மில்லியன் டன்கள் ஆகி உள்ளது. இதன் மூலம் ரூ.2700 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இவற்றில் அதிக அளவு ஆடை நீக்கப்பட்ட பால் பவுடர் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக வெண்ணெய், நெய் உள்ளிட்டவை ஏற்றுமதி ஆகி உள்ளன.
இது குறித்து விலங்குகள் நல அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர், “கடந்த வருடம் மத்திய அரசு ஏற்றுமதிக்கான புதிய திட்டம் ஒன்றை அறிவித்தது. இதற்கு முன்பு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான உதவித் தொகை 10% ஆக இருந்தது. அந்த தொகை சென்ற ஆண்டு முதல் 20% ஆக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகை ஒரு சில குறிப்பிட்ட பொருட்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த உதவித் தொகையினால் ஏற்றுமதியாளர்கள் விலையைக் குறைத்து அதிக அளவில் ஏற்ருமதி செய்ய முடிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.