மும்பை: ஊரடங்கு தளர்வுகளையடுத்து, நாட்டின் ஏற்றுமதி அதிகரித்துவரும் நிலையில், சீனாவுக்கான ஏற்றுமதி வளர்ச்சி, 78% என்பதாக உயர்ந்திருக்கிறது. அதேசமயம் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கான ஏற்றுமதி அளவுகள் சரிந்துள்ளன.
மேலும், மலேசிய நாட்டிற்கான ஏற்றுமதியும் 76% என்பதாக அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, மைனஸ் 60.2% அளவுக்கு சரிந்த நிலையில், ஜூலையில் மைனஸ் 10.2% என்ற அளவுக்கு மீட்சியைக் கண்டது. தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் ஏற்றுமதியும் அதிகரிக்க துவங்கியிருக்கிறது.
ஏற்றுமதி வீழ்ச்சியில், மே மாதத்தில் 50% அளவுக்கும்; ஜூன் மாதத்தில் 30% அளவுக்கும் மீட்சி ஏற்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் நிலைமைகள் முற்றிலும் மாறி, சீனாவுக்கான ஏற்றுமதி 78% என்பதாகவும், மலேஷியாவுக்கு 76% என்பதாகவும் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில், அங்கு கொரோனா பாதிப்புகள் வீழ்ச்சியடைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு நாடுகளுக்கான ஏற்றுமதி, மைனஸ் 53.2% என்பதாகவும், பிரிட்டனுக்கான ஏற்றுமதி மைனஸ் 38.8% என்பதாகவும், அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மைனஸ் 11.2% என்பதாகவும், பிரேசிலுக்கான ஏற்றுமதி மைனஸ் 6.3% என்பதாகவும் சரிவைக் கண்டன. இதை வைத்துப் பார்க்கையில், ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளின் நிலைக்கேற்ப, நிலைமைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
சீனாவை பொறுத்தவரை, கொரோனா பாதிப்பு, மற்ற நாடுகளை விட மிகவும் முன்பாகவே ஏற்பட்டு சீராகிவிட்டது. இதனால், அதன் பொருளாதாரம், ஜூன் காலாண்டில் 3.2% வளர்ச்சியைக் கண்டது. ஆனால், பிற நாடுகள் பலத்த சரிவைக் கண்டன.