அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக போர் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு வரி உயர்வை அறிவித்துள்ளார் டிரம்ப்.
இந்த வரி உயர்வில் இருந்து விலக்கு வேண்டுவோர் நியாயமான காரணத்துடன் கூடிய கடிதத்துடன் வெள்ளை மாளிகையில் வந்து சரணடைந்தால் அதற்குரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஏப்ரல் 8 அன்று நடைபெற்ற குடியரசுக் கட்சியினருக்கான நிதி திரட்டும் விழாவில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப், விரைவில் மருந்து பொருட்களுக்கான வரி உயர்வை எதிர்பார்க்கலாம் என்று கூறினார்.
உலகளவில் மருந்து மற்றும் அதன் மூலப் பொருட்களை விநியோகிக்கும் முன்னணி நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது.
அதேவேளையில், அமெரிக்காவில் மருந்து பொருட்களின் உற்பத்தி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அதிகம் இல்லையென்ற போதும் இந்த வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் முக்கிய நாடாக இருந்து வருகிறது.
இந்நிலையில், மருந்து பொருட்கள் மீது வரி உயர்த்தப்படும் என்று கூறிய டிரம்ப், மருந்து பொருட்களின் விற்பனை சந்தையாக அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகிப்பதை அடுத்து இந்த விலையேற்றத்தை அடுத்து அவர்கள் நம்மிடம் வரவேண்டிய நிலை ஏற்படும் என்று அந்த விழாவில் பேசினார்.
உள்நாட்டு மருந்து உற்பத்தி இல்லாதது குறித்து அவர் நீண்ட காலமாக வருத்தப்பட்டு வரும் நிலையில், நாட்டிற்குள் அதிக திறனைக் கொண்டுவர வரிகளை மீண்டும் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
எஃகு, அலுமினியம், ஆட்டோமொபைல், தாமிரம் மற்றும் சிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஏற்கனவே 25 சதவீத வரி உயர்வை அறிவித்துள்ள நிலையில் தற்போது மருந்து பொருட்களுக்கும் வரி உயர்வு குறித்து டிரம்ப் பேசியிருப்பது சந்தை முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.