அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்து கோயிலில் தொண்டு செய்வதற்காக உலகம் முழுவதும் இருந்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் சென்றுள்ளனர்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட ராமர் கோயிலை கடந்த மாதம் திறந்து வைத்த கையோடு பிரதமர் மோடி அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்த இந்து கோயிலை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் முன்னிலையில் நேற்று திறந்து வைத்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையின் அடையாளமாகத் திகழும் இந்த கோயிலைக் கட்டுவதற்காக 27 ஏக்கர் நிலத்தை அபுதாபி மன்னர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் 2015ம் ஆண்டு தானமாக வழங்கினார்.
அதற்கான சட்ட அங்கீகாரம் பெறப்பட்டதை அடுத்து 2019 டிசம்பர் மாதம் இதன் கட்டுமானப் பணி துவங்கிய நிலையில் பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்கள் இங்கு வந்து கட்டுமானப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
13.5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட கோயிலின் கட்டிடக் கலைஞர் ஓர் கத்தோலிக்க கிறிஸ்தவர், திட்ட மேலாளர் ஒரு சீக்கியர், அடித்தள வடிவமைப்பாளர் ஒரு புத்தர், கட்டுமான நிறுவனம் ஒரு பார்சி குழு மற்றும் இயக்குனர் ஜெயின் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் என்று இதனை நிர்மாணித்துள்ள BAPS என்ற வழிபாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
700 கோடி ரூபாய் செலவில் 18 லட்சம் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த கோயில் ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளில் கட்டப்பட்டுள்ள மிகவும் பிரம்மாண்டமான கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.
கோயில் தவிர மீதமுள்ள 13.5 ஏக்கர் நிலத்தில் சுமார் 14,000 கார்கள் மற்றும் 50 பேருந்துகள் நிறுத்தும் வகையில் கட்டுமானங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்த கோயிலின் கட்டுமான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்காக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியர்கள் இங்கு வந்து தன்னார்வலர்களாக தொண்டு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.