டெல்லி:
கடந்த 3 ஆண்டுகளில் டீசல் மீதான மத்திய கலால் வரி 380 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோலுக்கு 120 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 2013-14 மற்றும் 2015-16ம் இடையிலான நிதியாண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வசூல் மூலம் மத்திய அரசின் வருவாய் இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.
பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு டீசல் மீது மட்டும் 3 ஆண்டுகளில் ரூ. 3.56ல் இருந்து ரூ. 17.33 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் பெட்ரோல் மீதான கலால் வரி இதே காலகட்டத்தில் ரூ.9.48 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ. 17.33 உயர்த்தியிருப்பது கிட்டத்தட்ட 380 சதவீதம் அதிகமாகும். பெட்ரோல் விலையில் 21.48 சதவீதம் அதிகமாகும். டீசல் விலையில் 4 முறை ரூ. 2க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையில் ரூ. 2க்கு மேல் 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது.
கலால் வரியை மத்திய அரசு மட்டும் உயர்த்துவது கிடையாது. மாநில அரசுகளும் வாட்/விற்பனை வரி மூலம் கடந்த 3 ஆண்டுகளில் உயர்த்தியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் வரை 10 மாநிலங்களில் டீசல் மீது 20 சதவீத வாட் விதிக்கப்பட்டது. அதே இந்த மாதம் வரை 16 மாநிலங்களில் 20 சதவீதத்திற்கு மேல் டீசல் மீது வாட் விதிக்கப்படுகிறது.
அதிகபட்சமாக சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரலில் 25 சதவீதம் விதிக்கப்பட்டது. 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 31.31 சதவீத வாட் டீசல் மீது விதி க்கப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரலில் பெட்ரோல் மீது 17 மாநிலங்களில் குறைந்தபட்சம் 25 சதவீத வாட் வித க்கப்பட்டது. தற்போது 25 மாநிலங்களில் குறைந்தபட்சம் 25 சதவீதம் விதிக்கப்படுகிறது. 2014 ஏப்ரலில் பஞ்சாப்பில் அதிகபட்சமாக 33.06 சதவீதம் விதிக்கப்பட்டது. தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 39.75 சதவீதம் விதிக்கப்படுகிறது.
2013-14 மற்றும் 2015-16ம் இடையிலான நிதியாண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய அரசின் கலால் வருவாய் இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. 2013-14ம் ஆண்டில் 77 ஆயிரத்து 982 கோடி. 2015-16ம் ஆண்டில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 591 கோடி.
2016-17ம் ஆண்டில் முதல் 9 மாத வசூலில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலான தொகையை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. அதே சமயம் பெட்ரோல், டீசல் மீதான வாட்/விற்பனை வரி மூலம் மாநிலங்களின் வருவாய் கணிசமான வளர்ச்சியை அடைந்தள்ளது. 2013-14ம் ஆண்டில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 45 கோடி ரூபாய், 2015&16ம் ஆண்டில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 848 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் மாநிலங்களின் வாட் வரிவிதிப்பு அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் அடிப்படை விலை கடந்த 3 ஆண்டுகளில் குறைந்த போதும், சர்வதேச கச்சா எண்ணை விலை குறை ந்தபோதும் மாநிலங்களில் வாட் உயர்த்தப்படவில்லை.
மாநிலங்களில் ஒப்பிடுகையில் வாட் மூலம் மகாராஷ்டிரா அரசு அதிக வருவாய் ஈட்டியுள்ளது. 2013-14ம் ஆண்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், உ.பி.,
தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்கள் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டிய மாநிலங்களாகும். ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலமும் 10 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியது.
பெட்ரோலிய பொருட்கள் மூலம் 2015-16ம் ஆண்டில் மத்திய மாநில அரசுகள் ஈட்டிய மொத்த வருவாய் ரூ. 4 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இதில் மத்திய கலால் வரி மற்றும் மாநில வாட் வரி மூலம் மட்டும் ரூ. 3.2 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 2016-17ம்ஆண்டில் மொத்த வருவாய் ரூ. 4 லட்சம் கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.