NEET PG 2024 தேர்வு ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு நடைபெற உள்ள நகரம் பற்றிய விவரம் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் மின்னஞ்சலுக்கு ஜூலை 29 முதல் அனுப்பப்பட்டு வருகிறது.

இதற்கான தேர்வு மைய்ய விவரம் தேர்வுக்கு மூன்று நாட்கள் முன்னர் ஆகஸ்ட் 8ம் தேதி அன்று மற்றொரு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

மாணவர்கள் தேர்வு நடைபெறும் நகரங்களுக்கு முன்னதாக செல்ல இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கான மைய்யங்கள் மாணவர்களின் இருப்பிடங்களில் இருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே மார்ச் மாதம் 3ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட இந்த தேர்வு பல்வேறு காரணங்களால் ஜூலை 7க்கு மாற்றப்பட்டது.

பின்னர் பொதுத்தேர்தலைக் காரணம் காட்டி முன்கூட்டியே ஜூன் 23க்கு மாற்றப்பட்டது.

ஆனால், ஜூன் 23ம் தேதி நடைபெற இருந்த தேர்வில் குளறுபடி நடைபெற வாய்ப்பிருப்பதாகக் கூறி தேர்வு ஆரம்பிக்க 10 மணி நேரத்துக்கு முன் தேர்வு நிறுத்திவைக்கப்பட்டது.

இதனால் 15 முதல் 18 மணி நேரம் பயணம் செய்து வேறு மாநிலம் வேறு நகரத்துக்கு சென்று தேர்வு எழுதக் காத்திருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தேர்வு நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆந்திராவின் சிறு நகரங்களில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல மருத்துவ மாணவர்கள் தாங்கள் அந்த ஊருக்கு செல்ல போதுமான ரயில் அல்லது விமான போக்குவரத்து இல்லை என்றும் அப்படியே இருந்தாலும் குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணம் செய்ய தேவையான டிக்கெட்டுகள் இல்லையென்றும், தங்கள் பயணம் மற்றும் தங்கும் வசதிக்கான செலவு பலமடங்கு அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், இதுபோன்ற தேவையற்ற அலைக்கழிப்புகளால் முதுநிலை மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை பெரிதும் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

https://x.com/journsuresh/status/1818877519312855318

தேர்வுகளை எழுத பல்வேறு மையங்கள் சென்னை போன்ற பெருநகரங்களின் உள்ளும் புறநகரிலும் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு சுமார் 24 லட்சம் பேர் எழுதும் நிலையில் NEET PG தேர்வை 2 லட்சம் பேர் மட்டுமே எழுதுகின்றனர்.

இதற்கான தேர்வு மையங்களை முறையாக ஒதுக்க முடியாத தேர்வு வாரியம் அது நடத்தும் தேர்வு முறை எப்படி முறையானதாக இருக்கும் என்று வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.