நிதிஷ்குமார் கட்சி வேட்பாளராக மக்களவை இடைத்தேர்தலில் ஐ.பி.எஸ். அதிகாரி போட்டி?
பீகார் மாநிலத்தில் காவல்துறை இயக்குநராக ( டி.ஜி.பி.) இருந்த குப்தேஷ்வர் பாண்டே, அண்மையில் விருப்பு ஓய்வு பெற்றார்.
ஐ.பி.எஸ்.அதிகாரியான அவர், முதல்-அமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பதாக கூறப்பட்டது.
இந்த  நிலையில், அவர் பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் அலுவலகத்தில் நிதிஷ்குமாரை நேற்று சந்தித்துப் பேசினார்.
அவர் ஐக்கிய ஜனதா தளத்தில் சேர உள்ளதாகவும், அவருக்கு நிதிஷ்குமார், கட்சி உறுப்பினர் அடையாள அட்டை வழங்க இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் பாண்டே நேற்று கட்சியில் இணைய வில்லை.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பாண்டே, ‘’ பதவியில் இருந்த போது தன்னை சுதந்தரமாகச் செயல்பட அனுமதித்ததால், அதற்கு  நன்றி சொல்லும் வகையில் முதல்வரைச் சந்தித்தேன்’’ எனக் கூறினார்.
ஆனால் ’’, இடைத்தேர்தல் நடைபெறும் வால்மீகி நகர் மக்களவை தொகுதியில் பாண்டே போட்டியிடுவார்’’  என ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
வால்மீகி நகர் தொகுதியின் ஐக்கிய ஜனதா தள எம்.பி.மகதோ கடந்த பிப்ரவரி மாதம் மரணம் அடைந்ததால், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது.
-பா.பாரதி.