பெங்களூரு

முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் நாளை காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார்.

 கடந்த சில காலமாக ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி எஸ் பதவியில் உள்ள அதிகாரிகள் ராஜினாமா செய்து விட்டு அரசியல் கட்சிகளில் இணைவது வழக்கமாகி உள்ளது.   சமீபத்தில் பதவி விலகிய ஐ பி எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜக வில் இணைந்தார்.  அவ்வகையில் முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் நாளை காங்கிரசில் இணைய உள்ளார்.

சசிகாந்த் செந்தில் சென்னையை சேர்ந்தவர் ஆவார்.  இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஐ ஏ எஸ் தேர்வில் தேர்ச்சி  பெற்றார்.  இவர் அகில இந்திய அளவில் 9 ஆம் இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தவர் ஆவார்.  இவர் கர்நாடக மாநிலத்தில் பல பொறுப்புக்களை வகித்துள்ளார்.

மக்களின் நன்மதிப்பைப் பெற்ற இவரை மாவட்ட ஆட்சிய பதவியில் இருந்து பணியிட மாற்ற செய்ய அரசு முயன்ற போது மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.  கடந்த 2017 ஆம் ஆண்டு தட்சிண கன்னடா மாவட்டத்தில் நடந்து வந்த மோதலை தடுக்க நியமிக்கப்பட்ட  சசிகாந்த் மோதலை வெற்றிகரமாகத் தடுத்தார்

அதன் பிறகு பாஜக அரசின் போக்கு பிடிக்காமல் 2019 ஆம் அண்டு செப்டம்பர் மாதம் பதவியில் இருந்து விலகினார்.  தன்னால் நாட்டில் நடக்கும் பல சம்பவங்களை சகிக்க முடியாததால் ராஜினாமா செய்ததாகத் தெரிவித்த அவர் தொடர்ந்து பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தார்.

நாளை சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.   அதையொட்டி அவர் தனது டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் சசிகாந்த் செந்தில், “தொடர்ந்து போராட ஒரு சக்தி கிடைக்கும் என்பதால் நான் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளேன்.  நான் எங்கிருந்தாலும்  ஒடுக்கப்பட்டோருக்காக எனது குரலை ஒரு ஆர்வலராக எழுப்புவேன்.  இதை எனது கடைசி மூச்சு வரை தொடர்வேன்” எனப் பதிந்துள்ளார்.