மும்பை
மும்பையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்திய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் சுமார் 33 வயது இளைஞர் ஆவார். இவர் யூனியன் பிரதேசமான நாகர் ஹவேலியில் மின்சாரச் செயலர் பதவியை வகித்தார். இவர் காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அறிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆயினும் தொடர்ந்து சமூக சேவைகள் செய்து வந்தார்.
நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் மும்பை நகரில் உள்ள மரின் டிரைவ் பகுதியில் சிலருடன் இவர் போராட்டத்தில் ஈடுபட்டார் அவர்கள் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர். மும்பை காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்து ஃபிரோஸ் மிதிபோர்வாலா, ஃபகத் அகமது, காலித், நசிருல் ஹக், ஃபைசல் கான் உள்ளிட்ட ஆர்வலர்கள் காவல்நிலையத்துக்கு வந்தனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் காவலில் வைக்கப்பட்ட பிறகு கண்ணன் கோபிநாதன் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அவர் செய்தியாளர்களிடம், “நாங்கள் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவை விதி எண் 14க்கு எதிரானது என்பதால் போராட்டம் நடத்தினோம். நாங்கள் ஆயுதம் எதுவும் இல்லாமல் போராட்டம் நடத்தியும் எங்களை காவல்துறையினர் கைது செய்தனர்.” எனத் தெரிவித்துள்ளார்.