சென்னை

ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையை 2 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் தெருவில் புதிதாக கட்டி வந்த வீடு அருகே கொலை செய்யப்பட்டார். செம்பியம் காவல்துறையினர் இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, திருவேங்கடம், வக்கீல் அருள் உள்பட 11 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் நடந்த முதல்கட்ட விசாரணையில் ஆற்காடு சுரேசின் படுகொலைக்கு பழிதீர்க்கும் விதமாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. கைதான 11 பேரிடம் 5 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்றபோது காவல்துறை பிடியில் இருந்து தப்பிய ரவுடி திருவேங்கடம் ‘என்கவுண்ட்டர்’ மூலம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காவல்துறையினர் கைதான கொலையாளிகளின் செல்போன்களை ஆய்வு செய்ததில் ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் யார்-யார்? என்ற விவரம் சிக்கியது. அதன்படி திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த பெண் வழக்கறிஞர் மலர்கொடி, வழக்கறிஞர் ஹரிஹரன், சதீஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண் தாதாவும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான அஞ்சலையும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.  தனிப்படையினர்  தலை மறைவாக இருந்த அவரை தேடி ஓட்டேரியில் பதுங்கி இருந்த அஞ்சலையை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

காவல்துறையினர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சதித்திட்டம் தீட்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் அஞ்சலை மீது வழக்குப்பதிவு செய்து அஞ்சலையின் வங்கி கணக்குகளை ஆராய்ந்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலைக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்து அஞ்சலை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.