அமராவதி: ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஜெகன்மோகன் ரெட்டி அரசு கைது செய்துள்ளது. இதையடுத்து அந்திர மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் பல இடங்களில் வன்முறைக்களமாக மாறி உள்ளதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. ஆந்திராவில் பதட்டம் நிலவி வருவதால் 60 பஸ்களும் தமிழக எல்லையான ஆரம்பாக்கம் வரை இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை ஜெகன்மோகன் ரெட்டி அரசு ஊழல் வழக்கில் இன்று காலை கைது செய்துள்ளது. . சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.317 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடுவை குற்றவியல் புலனாய்வு காவல்துறையினர் இன்று காலை 6 மணியளவில், ஆந்திர மாநிலம் ஞானபுரம் நந்தியாலா டவுன் பகுதியில் உள்ள ஆர்கே ஹாலில் கைது செய்தனர்.
இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 120B (கிரிமினல் சதி), 420 (மோசடி) மற்றும் 465 (போலி ஆவணம் தயாரித்தல்) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆந்திரப் பிரதேச சிஐடி சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தை பிறப்பித்துள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 50 பிரிவுகள் (1) (2)ன் கீழ் அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவுக்கு பொருளாதாரக் குற்றங்கள் தடுப்புப் பிரிவு எஸ்.பி. தனஞ்சயநாயுடு அளித்த நோட்டீஸில், “இந்த நோட்டீஸின் வாயிலாக தாங்கள் கைது செய்யப்படுவது தெரிவிக்கப்படுகிறது. ஜாமீனில் வெளிவர இயலாத சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளீர்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
வீடியோ உதவி: நன்றி ANI
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும், ஆங்காங்கே தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார கைது செய்துள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலையில் டயர்களை எரித்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆந்திராவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. பல இடங்களில் பேருந்து சேவை முடக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து திருப்பதி, நெல்லூர், விஜயவாடா, காளஹஸ்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இரு மாநில பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 60 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள், ஆந்திராவில் பதட்டம் நிலவி வருவதால் 60 பஸ்களும் தமிழக எல்லையான ஆரம்பாக்கம் வரை இயக்கப்படுகிறது. அதேபோல் ஆரம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு மாதவரத்திற்கு திரும்பி வருகிறது. ஆந்திர மாநிலத்திற்குள் செல்லவில்லை.
ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாதவரத்தில் இருந்து 140 பஸ்கள் தினமும் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மாதவரம் பஸ் நிலையத்திலும் ஆந்திர மாநிலத்திலும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. இரு மாநில அரசு பஸ்களும் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். மாதவரம் பஸ் நிலையத்தில் திருப்பதி, நெல்லூர், காளஹஸ்தி செல்லக்கூடிய பயணிகள் பஸ்கள் ஓடாததால் தவிப்புக்கு ஆளானார்கள். இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில், “ஆந்திரா மாநிலத்தில் நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையால் மாதவரத்தில் இருந்து ஆரம்பாக்கம் வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. அங்கு நிலைமை சீராகும் வரை இதே நிலை நீடிக்கும்” என்றார்
என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும், வழக்கை திசை திருப்புகிறார்கள்; நான் எந்த ஊழலையும் செய்யவில்லை, சட்டபடி வழக்கு விசாரணையை சந்திப்பேன். என்மீதான புகாரில் உண்மையில்லை என்பதால் கட்சியினர் யாரும் பதற்றப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.