டெல்லி: நாடு முழுவதும்  தேர்தல் நடத்த  மின்னணு வாக்குப்பதிவு  இயந்திர வேண்டாம்,  பழைய முறையிலான  வாக்குசீட்டு முறை மீண்டும் கொண்டு வரவேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யிமான  மல்லிகார்ஜுன கார்கே  வலியுறுத்தி உள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று   கூறியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி 235 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.அதுபோல ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெஎம்எம் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றி உள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில  தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில், மீண்டும் வாக்குச்சீட்டு முறையிலான வாக்குப்பதிவுக்கு உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள், தேர்தலில் தோல்வி அடைந்தால் உடனே வாக்குச்சீட்டு முறை என்பதும், வெற்றி பெற்றால் மின்னணு வாக்குப்பதிவு சரியானது என்று விமர்சிப்பதும்  வாடிக்கையாக உள்ளது  என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்த நிலையில், தலைநகர் டெல்லியில்,  காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற அரசமைப்பு தின விழாவில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ‘ஹரியாணாவில் காங்கிரஸ் தோல்விக்கு வாக்குப்பதிவு செயல்முறையே காரணம் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்கிறோம்.

சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே காரணம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, அது தேவையும் இல்லை. மீண்டும் வாக்குச்சீட்டு முறையே எங்களுக்கு வேண்டும்.

வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால் பாஜகவின் உண்மையான நிலை என்ன என்பது தெரிந்துவிடும். மீண்டும் வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

மீண்டும் வாக்குசீட்டு முறை தேர்தலைக் கொண்டுவர வலியுறுத்தி ராகுல் காந்தி தலைமையில் நடைப்பயணம் மேற்கொள்ளப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரதமர் மோடி அவரது வீட்டிலோ ஆமதாபாத் குடோனிலோ வைத்துக்கொள்ளட்டும் என கடுமையாக விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசியவர், அரசமைப்புச் சட்டம் சாதாரணமாக உருவாக்கப்படவில்லை. அதனை உருவாக்க காங்கிரஸ் கட்சி மிகவும் கடினமாக உழைத்தது. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் அம்பேத்கரின் முக்கிய பங்களிப்பு உள்ளது. பாஜக அரசு நிலையாக இல்லை, கூட்டணிக் கட்சிகளை நம்பியே உள்ளது. இன்று, அவர்கள் (பாஜக) பெரும்பான்மை கொண்டிருக்கவில்லை என்று கூறியதுடன், பிரதமர் நரேந்திர மோடி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அஞ்சுகிறார்’ என்றும் கடுமையாக விமர்சித்தார்.