சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு  அகில இந்திய காங்கிரஸ்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸ் , விசிக தலைவர் திருமா, தவெக தலைவர் விஜய் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.  உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை காலமானார். அவரது உடல் தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று அவரது இல்லத்துக்குக் கொண்ட செல்லப்பட்டு அவரது உறவினர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இளங்கோவன் உடல்  நாளை சத்தியமூர்த்தி பவனில் கட்சித் தொண்டர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்த வைக்கப்படவிருக்கிறது.  அதைத்தொடன்ரந்து,  சென்னை ராமாபுரததில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன்பிறகு நாளை சென்னையிலேயே இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில்,   ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர், மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் மற்றும் பெரியாரின் கொள்கைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். தமிழக மக்களின் நலனுக்காகப் பாடுபட்டவர் என கூறி உள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு. கட்சிரஸ் கட்சியினர் தன்மானத் தலைவர் என்று வாஞ்சையோடு அழைப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், இளங்கோவன் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் என்மீது மிகுந்த பற்றுதல் கொண்டிருந்தவர் ஈவிகேஎஸ். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர். இவரது மறைவு தமிழக அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பு என்று அவர் கூறியுள்ளார்.

விசிக எம்ப ரவிக்குமார் இரங்கலில், மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாகப் பேசக்கூடியவர் ஈவிகேஸ். பல்வேறு விமர்சனங்கள் வந்தபோதிலும் தனது கருத்தை ஆணித்தரமாகவே தெரிவித்து வந்தார் என்று அவர் கூறினார்.

பாமக நிறுவனர் ராமதஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

நீண்ட பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்திலிருந்து வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழகத்தில் மிகவும் நெருக்கடியாக கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்று, அதை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டவர். பாமக-வுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். என் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர். தைலாபுரம் தோட்டத்தில் பாமக-வின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் பாமக-வின் கொள்கை வழிகாட்டிகளாக பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் உருவச் சிலைகள் அமைக்கப்பட்ட போது, அவற்றில் பெரியாரின் சிலையை இளங்கோவனை அழைத்து தான் திறக்கச் செய்தேன். தமிழக அரசியலில் அவர் பயணிக்க வேண்டிய தொலைவும், படைக்க வேண்டிய சாதனைகளும் ஏராளமாக இருந்த நிலையில் அவரது மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.

ஈவிகேஎஸ் இளங்கோவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.