சென்னை: அதிமுகவின் தீர்மானம் எடப்பாடி பழனிசாமியின் பயப் பட்டியல் என்றும், “எல்லாம் பயம் மயம்” என்றும், அதில்   பாஜக மீதான பாசம் அதிகம் காணப்படுகிறது என திமுக  அமைச்சர் கே.என்.நேரு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் திமுக அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு ’கண்டனம்’ என்றும், மோடி அரசுக்கு எதிரான தீர்மானங்களில் ’வலியுறுத்தல்’ என்றும் சொல்லி பாஜக பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறாரர், என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை  திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேரு கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜகவோடு கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக அதனை மணிக்கொரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்கிது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் திமுக அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு ’கண்டனம்’ என்றும், மோடி அரசுக்கு எதிரான தீர்மானங்களில் ’வலியுறுத்தல்’ என்றும் சொல்லி பாஜக பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பழனிசாமிக்கு மோடி என்றால் பயம், அமித்ஷா என்றால் பயம், அமலாக்கத் துறை பயம், சிபிஐ பயம், வருமானவரித் துறை பயம், ஆளுநர் பயம், ரெய்டு பயம், சின்னம் பறிபோய்விடுமோ என்று பயம்! இப்படி பழனிசாமியின் பயப் பட்டியலும் “எல்லாம் பயம் மயம்” எனச் சீனப் பெருஞ்சுவர் போல் நீள்கிறது.

* குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்த மசோதா மாநிலங்களவையில் தோல்வி அடைந்திருக்கும்.
* நாடாளுமன்றத்தில் சுரங்கம் மற்றும் கனிமத் திருத்த மசோதாவிற்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை ஆதரவளித்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மறைமுக ஆதரவு.
* ஜெயலலிதா எதிர்த்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டத்துக்கெல்லாம் மோடிக்குப் பயந்து ஆதரவு.
* முத்தலாக் தடை சட்டத்திற்கு மக்களவையில் ஆதரவு மாநிலங்களவையில் எதிர்ப்பு என அதிமுக இரட்டை வேடம் போட்டது.
* முஸ்லிம்களை அவதூறாகப் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பணிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை 2024-இல் மாநிலங்களவையில் கொண்டு வர ஆதரித்துக் கையெழுத்திட மறுத்தது.
* நாடு விடுதலை அடைந்த நாளில் இருந்த வழிபாட்டுத் தலங்களை வேறு மதங்களுக்கு மாற்ற முடியாது எனும் மத வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-க்கு எதிராக பாஜக நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், கருத்து தெரிவிக்காமல் அதிமுக பதுங்கியது.
* ’நான் ஒரு விவசாயி’ என்று சொல்லிக் கொண்டே மோடி அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை பலமாக ஆதரித்தது மட்டுமின்றி அவற்றை எதிர்த்தவர்களையும் கடுமையாக விமர்சித்த விஷவாயு நீங்கள்.
* மாநிலங்களின் சுயாட்சிக்கு எதிரான ஒரு நாடு ஒரு தேர்தல் மசோதாவையும் ஆதரிக்கும் பாஜகவின் உன்னத தோழன் அதிமுக.

இப்படி மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்களையும் திட்டங்களையும் ரெய்டுக்கு பயந்து ஆதரித்த கோழைதான் பழனிசாமி. இவர்தான் அதிமுக பொதுக்குழுவில் வீராவேச மாகப் பேசுவது போல், காற்றோடு கத்தி சண்டை போடுகிறார். பெட்ரோல் விலை உயர்வு, காஸ் விலை உயர்வு என என்றைக்காவது கண்டித்து பழனிசாமி அறிக்கை விட்டிருக்கிறாரா?

“அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும். 2026-ல் அதிமுக மீண்டும் அரியணை ஏறும்” என்றெல்லாம் பொதுக்குழுவில் ஆக்ரோஷமாகப் பேசியிருக்கிறார். கோழைக்கு ஆசை என்ன? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

இவ்வாறு கூறியுள்ளார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் விவரம்:

 அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15ந்தேதி அன்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை வானகரத்தில்  நடைபெற்றது. இதில்,   காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கும் தொழிலதிபர் ரத்தன் டாடா, சி.பி.எம். பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கும் இரங்கல் தெரிவித்தனர்.

பின்னர்,  பொதுக்குழு மற்றும்  செயற்குழு கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1. அதிமுக எம்.ஜி.ஆர். ஜானகி 100 ஆண்டு விழாவை சிறப்பாக நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2. டங்ஸ்டன் தொழிற்சாலைக்கான ஒப்பந்த ஏலத்தை தடுக்கத் தவறியதாக திமுக அரசை கண்டித்தும், மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் ஆலை அமைவதை கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3. ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திட மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

5. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடும் தமிழ் இடம் பெறவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

6. மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை தவிர்த்து, ஆங்கிலத்தில் தொடர மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

7. கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையும் சம வாய்ப்புகளையும் வழங்கிடும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க திமுக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

8. கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

9. ஃபார்முலா 4 கார்பந்தயம் , பேனா சிலை வைப்பது பூங்காக்கள் அமைப்பது என மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

10. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, போதை பொருட்கள் நடமாட்டம், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, பால் விலை உயர்வு, பத்திரப் பதிவு கட்டணம் உயர்வு, முத்திரைத்தாள் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பீடு உயர்வு ஆகிய உயர்வை கண்டித்து திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

11. வாக்காளர்கள் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றின் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதை சரி செய்திடவும், தேர்தல் நியாயமாக நடத்தப்படவும் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி அதிமுக பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

12. இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளாத திமுக என தீர்மானத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13. அதிமுக ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டம், தடுப்பணைகள் திட்டம், அணைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆழப்படுத்தி நீரை சேமிக்கும் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டதை திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்த தவறியதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

14. நீட் தேர்வு ரத்து குறித்து நாடகமாடும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

15. தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வை பாரபட்சமின்றி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

16. 2026-ல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம்.

இவ்வாறு 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.