பாகிஸ்தான் கலைஞர்களை பாலிவுட் படங்களில் பயன்படுத்தக்கூடாது, அப்படி பயன்படுத்துபவர்கள் இந்திய ராணுவத்தின் நிதிக்கு ரூ.5 கோடி கொடுத்துவிட்டு பின்னர் பாகிஸ்தான் கலைஞர்களை பயன்படுத்தட்டும் என்று மகாராஷ்டிர நவநிர்மாண் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரன் ஜோஹரின் “ஏ தில் ஹே முஷ்கில்” என்ற திரைப்படத்தில் பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் நடித்திருந்ததால் அந்த திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு ரிலீசாவதில் சிக்கல் இருந்தது. இப்படம் வெளிவருவதற்கு மகாராஷ்டிராவில் இருக்கும் மஹாராஷ்டிர நவ நிர்மாண் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இதையடுத்து கரன் ஜோஹர் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நவிஸ் மற்றும் மஹாராஷ்டிர நவ நிர்மாண் அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோரை சந்தித்து பேசினார். அச்சந்திப்பில் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முகேஷ் பட், தயாரிப்பாளர்கள் சித்தார்த் ராய் கபூர், சஜீத் நாடியாட்வாலா மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸின் விஜய் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.
இனி பாகிஸ்தான் நடிகர்களை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்தபின் அப்படத்தை திரையிட தாங்கள் தடை செய்வதில்லை என்று ராஜ்தாக்கரே உறுதியளித்தார்.
பாகிஸ்தானில் இந்திய கலைஞர்கள் பணியாற்ற முடியாத நிலை இருக்கும்போது, பாலிவுட் மட்டும் ஏன் பாகிஸ்தான் கலைஞர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது என்று கேட்டவர், இவ்வளவு காலம் எங்கள் கோபத்தையும் போராட்டத்தையும் புரிந்து கொள்ளாமல் இருந்த பாலிவுட் இப்போது எங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு பாகிஸ்தான் நடிகர்களை இனி பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்திருப்பது நல்ல அறிகுறி என்று அவர் குறிப்பிட்டார். அதையும் மீறி பயன்படுத்த விரும்புவோர் இந்திய ராணுவத்தின் நிதிக்கு ரூ.5 கோடி கொடுத்துவிட்டு பின்னர் பாகிஸ்தான் கலைஞர்களை பயன்படுத்தட்டும் என்றார்.
இந்த சந்திப்பையடுத்து “ஏ தில் ஹே முஷ்கில்” திரைப்படம் தீபாவளிக்கு ரீலீஸ் செய்யப்படுவதற்கு இருந்த சிக்கல் நீங்கியிருக்கிறது.
அண்மைய செய்தி
உங்கள் அரசியலில் இராணுவத்தை இழுக்காதீர்கள்: ராஜ் தாக்கரேக்கு கண்டணம்