டில்லி
சந்திரயான் 2 இறங்கும் போது தொடர்பு அறுந்தது எனினும் இந்திய அறிவியலுக்கு இது ஒரு சாதனை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த ஒரு நிகழ்வு இந்திய விண்கலம் சந்திரயான் 2 நிலவில் இறங்குவதாகும். நேற்று இரவு முழுவதும் இந்தியர்கள் மட்டுமின்றி பல உலக நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்நிகழ்வை நேரடியாகக் காண காத்திருந்தனர். பிரதமர் மோடி இஸ்ரோவில் இதை நேரடியாகக் காண வந்திருந்தார். இது நிலவுக்கு இந்தியா அனுப்பும் இரண்டாம் விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலவைச் சுற்றி சந்திரயான் 2 வட்டமிடும் போது நிலவில் இறங்க வேண்டிய விக்ரம் லாண்டர் திடீரென நிலவுக்கு சுமார் 2.1 கிமீ தூரத்தில் இருக்கும் போது அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நள்ளிரவு சுமார் 1.58 க்கு தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு மீண்டும் இணைப்பு ஏற்படவில்லை. இதனால் விக்ரம் லாண்டர் தரையில் இறங்கியதா இல்லையா என்பதும் தெரியாத நிலையில் உள்ளது.
இந்த திட்டம் ஏற்கனவே ரஷ்யா அளிக்க வேண்டிய லாண்டர் அளிக்காததால் மூன்று வருடம் தாமதமானது. அதையொட்டி இஸ்ரோ தானே லாண்டர் என்னும் நிலவில் இறங்கும் பகுதியை அமைக்க முடிவு செய்தது. முதலில் விண்ணில் செலுத்தத் தேதி மற்றும் நேரம் குறிக்கப்பட்டும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கிளம்புவதற்கு ஒரு மணி நேரம் முன்பு ராக்கெட் நிறுத்தப்பட்டது. அந்த கோளாறு 6 நாட்களில் சரி செய்யப்பட்டு மீண்டும் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
நிலவின் தெற்கு பகுதியில் இந்த லாண்டரை இறக்க இந்தியா முடிவு செய்தது. இதுவரை எந்த நாடும் இந்தப்பகுதியில் இறங்கி ஆய்வு செய்ததில்லை. அங்கு இரவு 14 நாட்கள் இருக்கும். அந்த 14 நாட்களும் அப்பகுதியில் கும்மிருட்டாக இருப்பதுடன் அங்கு மைனஸ் 170 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் இருக்கும். இந்தப் பகுதியில் பல பள்ளத்தாக்குகள் உள்ளதால் அவற்றில் எங்காவது விக்ரம் லாண்டர் இறங்கி இருந்தால் பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகின் பல நாடுகளில் உள்ள ஊடகங்களும் நிலவின் தெற்குப்பகுதியில் தரை இறங்க ஏன் முயன்றது என்பதைப் பற்றித் தெரிவித்த வண்ணம் உள்ளது. அதே நேரத்தில் பல உலக விஞ்ஞானிகளும் தோல்வி என்பது வெற்றியின் முதல் படி என்பதை எடுத்து உரைக்கின்றனர். பல விஷயங்கள் முயலும் போது கிடைக்கும் தோல்வியால் புதியவை பலவற்றைக் கற்க முடியும் என்பதும் யாவரும் அறிந்த ஒன்றாகும். ஒவ்வொரு வெற்றிக்குப் பின்பும் பல தோல்விகள் உள்ளன என்பதும் உலகறிந்த உண்மையாகும்.
சந்திரயான் 2 விண்வெளியில் 3,84,400 கிமீ தூரம் பயணம் செய்துள்ளது. நிலவுக்கு 2.1 கிமீ தூரம் அருகே செல்லும் போதுதான் இஸ்ரோவுடன் ஆன தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தாய்க்கலம் சந்திரனைத் தொடர்ந்து சுற்றி வருகிறது. அடுத்த வருடம் வரை இது தொடர்ந்து சுற்றி வரும். எனவே அந்த தாய்க்கலத்தின் மூலம் விக்ரம் லாண்டர் தொடர்பு துண்டிக்கபடதற்கு காரணங்கள் தெரிய வரும். எனவே அடுத்த முறை இந்த தவறு ஏற்படாமல் இஸ்ரோ வெற்றி பெறும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.