டெல்லி: மிதமான கொரோனா பாதிப்பு கூட ஆண்களின் ஆண்மை தன்மைக்கு வேட்டு வைத்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மும்பை ஐ.ஐ.டி., மும்பை ஜஸ்லோக் மருத்துவமனை இணைந்து நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ், ஆண்களின் குழந்தை பேறு திறனில் பாதிப்பை ஏற்படுத்துவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை புரட்டிப்போட்டு வந்த கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு இணைநோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. இதற்கு கொரோனா தடுப்பூசியை காரணமாக கூறினாலும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் ஸ்டீராய்டு போன்ற மருந்துகளின் பின்விளைவுகளும் காரணம் என கூறப்பட்டது. ஆனால், இதை மருத்துவ நிபுணர்கள் துணிச்சலாக கூற மறுத்து விட்டனர்.
ஆனால், கொரோனா தாக்குதலுக்கு உள்ளான ஒருவரின் உடலில் ரத்தம் உறைதல் பிரச்னையை ஏற்படுத்தி தீவிர இதய பிரச்னை, பக்கவாதம், கைகால் போன்ற உறுப்புகள் செயலிழப்பு போன்ற நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கொரோனா வைரஸ் குறித்து நடத்தப்பட்டுவரும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. “கொரோனா வைரஸின் தாக்கம் ஒருவரின் உடலில் அதிகமாகும்போது ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படுகிறது. இது டிஸ்சிமினேடட் இன்ட்ராவாஸ்குலார் கோயாகுலேஷன் (Disseminated intravascular coagulation) எனப்படும். அதாவது, பரவலான ஊடுருவும் ரத்த உறைதல். இவ்வகை ரத்த உறைதலில் மெல்லிய ரத்தக் குழல்களினுள் ரத்த செல்கள் சிறு சிறு கட்டிகளாக உறைந்து உடலினுள் ரத்த ஓட்டத்தைத் தடைசெய்கிறது என்பது ஏற்கனவே ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுபோல, கொரோனா வைரஸ் ஆண்களின் விந்து செல்களைப் பாதித்து அவர்களை ஆண்மை இழக்கச் செய்வதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், இதை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு நிறுவனமும் ஏற்கவில்லை.
“கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும் என்பது ஒரு யூகமாகச் சொல்லப்படுகிறதே தவிர நிரூபிக்கப்படவில்லை. ரத்தம், சிறுநீர் போன்ற மனித உடல் திரவங்களில் கொரோனா வைரஸ் இருந்ததுபோல் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்து திரவத்தில் வைரஸ் இருப்பது டெஸ்டில் கண்டறியப்பட்டுள்ளது என்றும், இது ஆண்களின் இனப்பெருக்கத்திறனை பாதிக்குமா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்று கடந்த 2021ம் ஆண்டு ஆய்வு ஒன்று கூறியது.
இந்த நிலையில்,கொரோனா பாதிப்பு காரணமாக ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுமா என்பது தொடர்பாக மு மும்பை ஐ.ஐ.டி., மும்பை ஜஸ்லோக் மருத்துவ மனை இணைந்து நடத்திய ஆய்வில் கொரோனா பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு ஆண்மை குறைபாடு, அதாவது அவர்களின் விந்தனுக்களில் மலட்டுத்தன்மை அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளது.
இந்த ஆய்விற்கு கொரோனா பாதிப்புக்கு உள்ளாகாத 10 ஆண்கள் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்ட 17 பேர் உள்பட மொத்தம் 27 ஆண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரின் விந்தணுக்கள் பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனை முடிவுகளின் மூலம் கொரோனா பாதித்தவர்கள் மற்றும் பாதிக்காதவர்கள் விந்தணுக்கள் ஒப்பிடப்பட்டன. இதில், கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இயல்பாக இருப்பவர்களைவிட சில முக்கிய மாறுபாடுகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
அதன்படி, கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்திருந்தது. மேலும் அவர்களின் விந்தணுவின் தரம் மற்றும் செயல்பாடும் குறைந்து காணப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பு உள்ளாகியிருந்தவர்களின் விந்தணுக்களில் இன பெருக்கத்திற்கு தேவையான புரோத அளவு பாதியாக குறைந்திருந்தும் தெரியவந்துள்ளது. அதாவது, கொரோனா தாக்காத ஆண்களின் புரோட்டீன்களை விட கொரோனா தாக்கி குணமடைந்த ஆண்களின் புரோட்டீன்கள் பாதிக்கும் குறைவாக இருந்தன. மேலும், அதன் நகரும் தன்மை, சரியான வடிவிலான விந்தணு எண்ணிக்கை ஆகியவையும் குறைவாக காணப்பட்டன.
எனவே, லேசான, மிதமான கொரோனா பாதிப்பு கூட ஆண்களின் குழந்தை பேறு திறன் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்பு ஏற்படுத்தி, மலட்டுத்தன்மைக்கு காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகும் அந்த பாதிப்பு நீடிப்பது தெரியவந்தது.
கொரோனாவை உண்டாக்கும் சார்ஸ் வைரஸ், பொதுவாக சுவாச உறுப்புகளைத்தான் தாக்கும். இருப்பினும், அந்த வைரசும், அதற்கு உடல் காட்டும் எதிர்வினையும் இதர திசுக்களையும் சேதப்படுத்துவது கண்டறியப்பட்டது. ஆனால், அது மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது என்பதை மும்பை ஐஐடி-யின் ஆய்வுமுடிவுகள் உறுதி செய்துள்ளது.
இது இளைய சமுதாயத்தினரிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.