கொச்சி
பிரபல பாடகர் கே ஜே ஏசுதாசுக்கு குருவாயூர் கோவிலுக்குள் நுழைஅய நுமதி மறுக்கப்பட்டதற்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளர்.
பிரபல பாடகரான கே ஜே ஏசுதாஸ் திரைப்படங்களிலும் கர்னாடக இசையிலும் பெரும் புகழ் பெற்றவர். பிறப்பால் இவர் கிறித்துவரானாலும் பல இந்துக் கோயில்களுக்கு சென்று கடவுளை வணங்கி உள்ளார். இந்துக் கடவுளர்கள் மீது பல பாடல்கள் பாடி உள்ளார். கடந்த சில காலம் முன்பு வரை இவர் பாடிய ஹரிவராசனம் பாடல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமிக்கு தாலாட்டுப் பாடலாக ஒலித்து வந்தது.
குருவாயூர் கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும் என்பது இவருடைய நீண்ட நாள் விருப்பம். ஆனால் இன்று வரை கோவில் நிர்வாகம் இவரை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இவர் பிறப்பால் கிறித்துவர் என்பது மட்டுமே இதற்குக் காரணம் ஆகும். இந்நிலையில் கேரளாவில் உள்ள திருப்புனித்துறாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ஏசுதாஸ் உரையாற்றினார்.
அப்போது, “நான் எனது தந்தையார் அகஸ்டின் ஜோசப் அவர்களை நினைத்து பெருமை அடைகிறேன். இசையைக் கற்பதினால் எந்த ஒரு வேலைவாய்ப்பும் கிடைக்காது என அறிந்தும் அவர் என்னை இசை பயில அனுமதித்துள்ளார். எனது இசையினால் எனக்கு கொல்லூர் மூகாம்பிகை கோவிலிலுக்கும் திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலிலுக்கும் சென்று வணங்க முடிந்தது.
ஆனாலும் எனக்கு குருவாயூர் கோவிலுக்குள் நுழைய இதுவரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நான் ரோமன் கத்தோலிக்க கிறித்துவ மதத்தில் பிறந்தவன் என்பதால் இந்த அனுமதி வழங்கப்பட வில்லை என நினைக்கிறேன். நான் ஒரு பூச்சியாக பிறந்திருந்தால் கூட குருவாயூர் கோவிலுக்குள் நுழைந்திருப்பேன். ஆனால் மனிதனாக பிறந்து விட்டேன்” என ஏசுதாஸ் கூறி உள்ளார்.