இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் கோவில்-மசூதி தகராறுகள் குறித்து ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சர்ச்சைகளை கிளப்புவதன் மூலம் இந்துக்களின் தலைவர்களாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ள சிலர் முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

‘இந்தியா : தி விஸ்வகுரு’ என்ற தலைப்பில் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பகவத், அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்திற்கு அழைப்பு விடுத்ததுடன் நாடு ஒற்றுமையாக வாழ முடியும் என்பதை உலகுக்குக் காட்ட வேண்டும் என்று கூறினார்.

காலங்காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இந்த நல்லிணக்கத்தை உலகிற்கு வழங்க வேண்டுமானால், அதற்கான மாதிரியை நாம் உருவாக்க வேண்டும்.

ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு, புதிய இடங்களில் இதுபோன்ற பிரச்சினைகளைக் கிளப்புவதன் மூலம் இந்துக்களின் தலைவர்களாக மாறலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். இதை ஏற்க முடியாது என பகவத் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராமர் கோவில் கட்டப்பட்டது ஏனெனில், இது அனைத்து இந்துக்களின் நம்பிக்கைக்குரிய விஷயம், என்று பகவத் கூறினார்.

நாட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சச்சரவு கொண்டுவரப்படுவதாகக் கூறிய அவர், அதற்கு ஏன் அனுமதியளிக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

இது தொடர முடியாது என்று கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர், நாம் ஒன்றாக வாழ முடியும் என்பதை இந்தியா காட்ட வேண்டும் என்றும் கூறினார்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி இப்போது நாடு இயங்குகிறது, மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள், அவர்கள் அரசாங்கத்தை நடத்துகிறார்கள் என்று பகவத் பேசினார்.

சிலர் பிடிவாதமாக தாங்கள் நினைத்ததை நிறைவேற்றவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள்.

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் ஆட்சியானது அத்தகைய எதேச்சதிகார ஆட்சியாக வகைப்படுத்தப்பட்டது.

இருப்பினும் அவரது வழித்தோன்றல் பகதூர் ஷா ஜாபர் 1857 இல் பசுக் கொலையைத் தடை செய்தார்.

அயோத்தியில் ராமர் கோவில் இந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது ஆனால் ஆங்கிலேயர்கள் அதை உணர்ந்து இரு சமூகத்தினரிடையே பிளவை உருவாக்கினர்.

அப்போதிருந்து, இந்த பிரிவினைவாத உணர்வு தோன்றியது. அதன் விளைவாகவே பாகிஸ்தான் உருவானது என்று மோகன் பகவத் பேசினார்.

சமீப மாதங்களில், புராதன கோவில்களிலின் மீது மசூதிகள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, மசூதிகளை கணக்கெடுக்கக் கோரி பல்வேறு நீதிமன்றங்களில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், பகவத், தனது இந்த பேச்சின் போது இந்த வழக்குகள் எதையும் குறிப்பாக குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.