டில்லி
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இந்தியாவில் உரிமைகள் ஆர்வலர்கள் மீது சமூக தாக்குதல் நடைபெறுவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் உரிமைகள் ஆர்வலர்கள் மீது கைது நடவடிக்கை உள்ளிட்ட சமூக தாக்குதல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக கடந்த 2018 ஆம் வருடம் ஜனவரி மாதம் கோரேகான் பகுதியில் நடந்த வன்முறை வழக்கில் மூன்று தலித் உரிமைகள் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். ஜார்கண்ட் மாநிலத்தில் அரசை விமர்சித்ததற்காக 20 பழங்குடி உரிமைகள் ஆர்வலர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டது.
இது போல பல புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இது குறித்து 20 பேர் கொண்ட ஐரோப்பிய பாராளுமன்றக் குழு ஒன்று ஆய்வு நடத்தியது. அதை ஒட்டி அந்த குழு தேசிய மனித உரிமை ஆணையம், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பழங்குடி நல அமைச்சர் ஜுவல் ஓரம் உள்ளிட்டோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.
அந்த கடிதத்தில், “இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகும். ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நட்பு நாடுகளில் இந்திய நாடும் ஒன்றாகும். இந்த நட்புக்கு மனித உரிமை, ஜனநாயகம் மற்றும் சட்ட ஒழுங்கு ஆகியவையே அடிப்படை ஆகும். அதனால் நாங்கள் சமீபத்தில் இந்தியாவில் நடந்து வரும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிரான நடவடிக்கைகளால் கடும் அதிருப்தி அடைந்துள்ளோம்.
இவ்வாறான சமூக தாக்குதல்கள் சமுதாயத்தை பெருமளவில் பாதிக்கக்கூடும். எனவே இதை மாற்ற தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட அனைத்து மனித உரிமை ஆர்வலர்களையும் விடுதலை செய்யவும் அவர்கள் மீதான சட்ட பூர்வ நடவடிக்கைகளை கைவிட வேண்டும் எனவும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளனர்.