டெல்லி: காஷ்மீருக்குள் இந்திய தலைவர்களை அனுமதிக்காமல், ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுமதி தந்திருப்பது, ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி இருக்கிறார்.
கடந்த ஆக. 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. தற்போது அந்த மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளன. அரசியல் கட்சியினர் சென்று பார்க்க, தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் 25 பேரை காஷ்மீருக்குள் சென்று அங்கிருக்கும் நிலவரங்களைப் பார்க்க மத்திய அரசு அனுமதி தந்திருக்கிறது. அவர்கள் அனைவரும் நாளை ஜம் காஷ்மீர் செல்கின்றனர்.
மத்திய அரசின் இந்த அனுமதியும், அது தொடர்பான நடவடிக்கையும் கடும் கொந்தளிப்பையும், கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது. இது குறித்து காங்கிரசின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: இங்குள்ள தலைவர்கள் ஜம்முகாஷ்மீர் செல்ல மத்திய அரசு அனுமதியை மறுத்திருக்கிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் காஷ்மீர் செல்ல அனுமதி தரப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தையும், ஜனநாயகத்தையும் அவமதிக்கும் செயல் என்று தெரிவித்து இருக்கிறார்.
இதேபோன்று, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கிலும் கடுமையாக மத்திய அரசை சாடியிருக்கிறார். அவர் தெரிவித்து இருப்பதாவது: ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் காஷ்மீர் சென்று பார்வையிட பாஜக அரசு அனுமதிக்கிறது. ஆனால், ஏன் இந்திய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மட்டும் தடை போட்டியிருக்கிறது?
காஷ்மீருக்குள் செல்ல இந்திய தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் நிலையில் இருக்கின்றனர். ஆனால், ஐரோப்பிய பிரதிகளுக்கு பிரதமர் அலுவலகம் வரவேற்பு அளிக்கிறது. எதற்காக இந்த வேறுபாடு? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.