பிரசல்ஸ்: இத்தாலியில் கொரோனா வைரஸ் வீரியம் காட்டத் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே, அந்நாட்டிற்கு ஐரோப்பிய ஆணையம் உதவாமல் போனதற்காக, தற்போது காலங்கடந்த பகிரங்க மன்னிப்புக் கேட்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்த ஆணையத்தின் தலைவர் அர்ஸலா வான் டெர், இந்த மன்னிப்பைக் கோரியுள்ளார்.
அவர் பேசியதாவது, “இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் ஆரம்ப கட்டத்தில் இருந்தபோது, யாரும் அந்நாட்டுடன் துணை நிற்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மைதான்.
இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியபோது, அதை எதிர்கொள்ள, நாங்கள் யாருமே தயாராக இருக்கவில்லை. ஒருவேளை அப்போதே ஐரோப்பிய நாடுகள் உதவியிருந்தால், வைரஸ் பாதிப்பும் உயிரிழப்புகளும் அங்கு குறைந்திருக்கலாம்.
நாங்கள் ஆரம்பக்கட்டத்தில் உதவ முடியாத காரணத்திற்காக, இத்தாலியிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்” என்றார் அவர்.
இந்த மன்னிப்பை சிலர் வரவேற்க, பலரோ காலம் கடந்த ஒன்று என்று விமர்சனம் செய்கின்றனர். மாண்டுபோன பல்லாயிரம் பேரை, இந்த மன்னிப்பு உயிர்ப்பித்து விடுமா? என்று வினவுகின்றனர் அவர்கள்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, உலகிலேயே, அதிக கொரோனா வைரஸ் மரணங்கள் நிகழ்ந்த நாடு இத்தாலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.