எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி எரிமலை பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஞாயிறன்று வெடித்தது.
இந்த எரிமலை வெடிப்பால் சுமார் 14 கி.மீ. உயரத்துக்கு எழுந்த சாம்பல் புகையை அரபு நாடுகளான ஏமன், ஓமன் நாடுகளில் இருந்தும் பார்க்கமுடிந்தது.

மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வரை வீசும் காற்றால் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சாம்பல் புகைமூட்டம் செங்கடல் மற்றும் அரபிக் கடலை கடந்து குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் புகைமூட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விமான போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
துபாய் மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இந்தியாவின் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு வரும் விமானங்களும் இங்கிருந்து அப்பகுதிக்கு செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

12000 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்த ஹேலி குப்பி எரிமலை திடீரென வெடித்ததில் எழுந்த சாம்பல் புழுதி காரணமாக 5000 – 6000 கி.மீ. தூரத்தில் உள்ள நகரங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைமூட்டம் இன்று மாலை அல்லது இரவில் சீனா நோக்கி நகரும் என்றும் அதன்பின் பசிபிக் பெருங்கடல் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.