சென்னை

ரோடு தொகுதியின் ம தி மு க மக்களவை உறுப்பினர் ஏ கணேசமூர்த்தி தாம் தேர்தலுக்கு முன்பே திமுகவுக்கு மாறி விட்டதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு மக்களவைத் தொகுதியில் மதிமுக சார்பில் ஏ கணேசமூர்த்தி போட்டியிட்டார்.  அவர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.    அவர் மதிமுக வில் இருந்துக் கொண்டு திமுகவின் சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டதால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என எம் எல் ரவி என்பவரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான பம்பரம் சின்னத்தில் அவர் போட்டியிடாமல் கூட்டணிக் கட்சியான திமுகவின் சின்னமான உதய சூரியனில் போட்டியிட்டது செல்லாது என வாதிடப்பட்டது.  இது குறித்து பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் கணேசமூர்த்திக்கு உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி அளித்த பதிலில், “நான் தேர்தலில் போட்டியிடும் முன்பே திமுகவுக்கு மாறி விட்டேன்.  எனவே நான் மதிமுக உறுப்பினர் இல்லை.  அத்துடன் நான் தற்போது திமுகவில் இருக்கிறேன்.  மக்களவையில் என்னை திமுக உறுப்பினராக அங்கீகரித்துள்ளனர்.   எனக்குத் திமுக கொறடா மக்களவையில் பேச நேரம் ஒதுக்குகிறார்” என தெரிவித்துள்ளார்.