சென்னை: மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றம் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் கட்டப்பட்ட புதிய பாலம் மற்றும்  புதிய திட்டங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம்  தொடங்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  இந்த விழாவில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 93 பயனாளிகளுக்கு 355 கோடியே 26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில்  பேசிய முதல்வர் ஸ்டாலின், கொரோனா காலம் என்பதால் விழாவில் காணொலி காட்சி மூலம் இவ்விழாவில் பங்கேற்பதாகவும்,  பெருந்துறை ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூலம் 1,311 படுக்கை மற்றும் கொரோனா சிகிச்சைக்காக 420 படுக்கை வசதிகளை ஏற்படுத்திய தொழிற்நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு நன்றியை தெரிவித்தனர்.

ஈரோடு மக்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்கப்படுவதாக  தெரிவித்தார். மேலும்,  உச்ச நீதிமன்ற வழங்கிய இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு இனிப்பு செய்தியாக உள்ளது என்றும், இதற்காக திமுக சட்டப்போராட்டம் நடத்தியதாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு பெரியாரின் சமூக நீதி கொள்கைக்கு கிடைத்த வெற்றியாக கருதுவதாகவும், திமுகவின் லட்சிய பயணம் தொடரும் என பேசினார்.

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில், சுமார் 1400 க்கு மேற்பட்ட மாணவர்கள்  பயின்று வருகின்றனர். இவர்கள்  சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்ற கடந்த 20 ஆண்டுகளாக மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு கல்லூரியாக மாற்றப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் சந்தோஷமடைந்துள்ளனர்.