அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில் சமீபத்தில் வெளியான புதிய ஆவணங்களில், ஒரு இந்திய பெண்ணும் பாதிக்கப்பட்டவராக இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு இழப்பீடு வழங்க அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவில் அவரை கண்டுபிடிக்க முயன்றதாக அந்த ஆவணங்கள் கூறுகின்றன.
2020 ஜனவரி 13-ஆம் தேதி அமெரிக்க அதிகாரிகள் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சலில், இந்தியாவில் உள்ள அந்தப் பெண்ணை கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு நிதியிலிருந்து உதவி வழங்க முயற்சி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“Epstein Victims” என்ற தலைப்பில் உள்ள அந்த மின்னஞ்சலில், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
மேலும், நியூயார்க் – குற்ற பாதிப்புக்கு உள்ளானோர் இழப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தேவையான ஆவணங்களை FBI-க்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எப்ஸ்டீன் 2019 ஆகஸ்டில் மரணமடைந்ததற்குப் பிறகு அனுப்பப்பட்ட தகவல் என கூறப்படுகிறது.
பில் கேட்ஸ் தொடர்பான மின்னஞ்சல்
மற்றொரு மின்னஞ்சலில், Bill Gates மற்றும் எப்ஸ்டீன் இடையிலான தொடர்பு வெளியாகியுள்ளது. 2014 ஜூன் 5-ஆம் தேதி அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சலில், அப்போது மத்திய சுகாதார அமைச்சராக இருந்த ஹர்ஷ் வர்தன் அவர்களை சந்திப்பது குறித்த கேள்வி இடம்பெற்றுள்ளது.
திலீப் சேரியன் குறித்து உரையாடல்
2017 ஏப்ரல் 2-ஆம் தேதி அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், எப்ஸ்டீனின் துணை தொடர்பாளர் ஜினோ யூ, இந்தியாவின் பிரபல பிஆர் நிறுவனத் தலைவர் திலீப் செரியன் அவர்களை சந்திக்க ஆர்வமா என கேட்டுள்ளார். அவர் பாரிசில் இருப்பதாகவும், சமீபத்தில் தனது விளம்பர மற்றும் பிஆர் நிறுவனத்தை 160 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘போலி செய்தி’ குறித்த விவாதம்
2018 ஜூன் 10-ஆம் தேதியிட்ட மற்றொரு மின்னஞ்சலில், ஜிடே ஸைட்லின் என்பவர் இந்தியாவில் வெளியான செய்திகளை ‘போலி’ என்றும், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்பே விசாரித்து தீர்க்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிலர் ஒரு வெளிநாட்டு நிதி ஆதரவு நிறுவனத்தை மிரட்ட முயன்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமானப் பயண அனுபவம்
2010 ஜூலை 8-ஆம் தேதி அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், ஒரு பெண் விமானத்தில் பயணிக்கும் போது அருகில் இருந்த முதிய இந்திய நபர் தவறாக நடந்து கொண்டதாக எப்ஸ்டீனிடம் பகிர்ந்துள்ளார். அந்த நபர் மதுபானம் அருந்தி தன்னை தொந்தரவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தத்தில், வெளியிடப்பட்ட இந்த ஆவணங்கள் எப்ஸ்டீன் வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த நபர்களும் தொடர்புபட்டிருப்பதை வெளிச்சம் போட்டுள்ளன. ஆனால் பல விபரங்கள் மறைக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்டவர்களின் முழு விவரங்கள் இன்னும் தெளிவாகவில்லை.
[youtube-feed feed=1]