இறந்துபோன பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விவகாரத்தில், உண்மையை வெளியில் சொல்ல முன்வரும் பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டால், அவர்களுக்கான சட்டச் செலவுகளை முழுமையாக நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தொழிலதிபர் எலான் மஸ்க் உறுதி அளித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை சமூக வலைதளமான ‘எக்ஸ்’-ல் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
“இந்த விஷயத்தில் உண்மையைப் பேசுவதற்காக யாராவது வழக்கை சந்திக்க வேண்டிய நிலை வந்தால், அவர்களை பாதுகாப்பதற்கான செலவுகளை நான் ஏற்கிறேன்,” என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தை அவர், பழமைவாத கருத்தாளர் மாட் வால்ஷ் வெளியிட்ட பதிவுக்கு பதிலாக கூறினார்.
மாட் வால்ஷ், எப்ஸ்டீனாலும் அவரது கூட்டாளிகளாலும் தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறும் பெண்கள் வெளியிட்ட புதிய விழிப்புணர்வு வீடியோ (PSA) ஒன்றை பகிர்ந்திருந்தார்.
அந்த வீடியோ, Super Bowl ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிடப்பட்டது.
இதில், அமெரிக்க அட்டார்னி ஜெனரல் பாம் பாண்டி, எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக “நிற்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாட் வால்ஷ், “எப்ஸ்டீன் தொடர்பாக நீதித்துறையிடம் இருக்கும் எல்லா கோப்புகளையும் வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
ஆனால், “இந்த பெண்கள், தங்களை துன்புறுத்தியவர்கள் யார் என்று ஏன் பெயருடன் சொல்லவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
“இந்த பெண்கள் எப்போது வேண்டுமானாலும் குற்றவாளிகளின் பெயர்களைக் கூறலாம். ஆனால் அதற்கு பதிலாக, பல மாதங்களாக ஒரு பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்கள்.
ஆச்சரியமாக, பைடன் பதவியிலிருந்து விலகிய உடனே தான் இது தொடங்கியது.
சமூகத்தில் மிக உயர்ந்த அதிகாரத்தில் இருக்கும் குழந்தை பாலியல் குற்றவாளிகளின் பெயர்கள் தெரியும் என்று சொல்கிறார்கள். ஆனால் அதை மக்களிடம் சொல்ல மறுக்கிறார்கள்,”
என்று வால்ஷ் விமர்சித்தார்.
பெண்கள் சட்டப் பிரச்சனைக்கு பயப்படுகிறார்கள் என்று சிலர் கூறியதற்கு, “அவர்கள் அந்த பெயர்களை தங்கள் ஆதரவாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சொல்லலாம். அவர்கள் நாடாளுமன்றத்தில் அந்த பெயர்களை உரக்க வாசித்தால், பெண்களுக்கும் வழக்கு வராது,” என்று வால்ஷ் கூறினார்.
“ஆனால் அதைச் செய்ய அவர்கள் மறுக்கிறார்கள். ஏன்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், “அவர்கள் உண்மையை சொல்வதற்காக எந்தவொரு சட்டச் சிக்கலையும் சந்தித்தால், அதற்கான செலவுகளை நான் ஏற்க தயாராக இருக்கிறேன்,” என்று எலான் மஸ்க் பதிலளித்தார்.
இதற்கிடையில், ஜனவரி மாத இறுதியில் வெளியான எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்களில், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் பெயரும் இடம்பெற்றிருந்தது.
[youtube-feed feed=1]