சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக ஏற்பட்ட மின்வெட்டு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இதற்கு அமைச்சர்அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று என்று கூறி அதிமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. அரசின் நிர்வாகத் திறமையின்மையே மின்வெட்டு பிரச்சினைக்கு காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று சமீப நாட்களாக அடிக்கட்டு ஏற்பட்டு வரும் மின்வெட்டு அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, கோடைகாலம் தொடங்கி உள்ளதால், தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது என்றும், நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். தினமும் 17,100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில், 13,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. வெளிமாநிலத்தில் இருந்து மின்சாரத்தை கொண்டுவர கடந்த ஆட்சியில் மின்பாதை அமைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். மின்வெட்டு காரணமாக விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனத்தினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ,இந்த அரசு முறையாக மின்சாரத்தை பெறவில்லை. மின்சாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்று கூறியதுடன், சத்தீஸ்கரிலிருந்து தமிழ்நாடு வரை மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது ஆனால், அதை இந்த அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்றம், மின்சாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்று கூறியதுடன், தடையில்லா மின்சாரம் கொடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது இந்த அரசு? கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்து பேசினார். அப்போது, அப்போது, மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்காததால் தான் மின்தடை ஏற்பட்டது என்றும், குறைந்த விலையில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி தருகிறது என்றும் இதனால்தான் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்ப்பட்டுள்ளது என்றும் கடந்த அதிமுக ஆட்சியிலும் 68 முறை மின்வெட்டு இருந்ததாக செந்தில் பாலாஜி கூறினார்.
ஆனால், மின்வெட்டு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து சட்டப் பேரவையில் இருந்து அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஈபிஎஸ், ”தமிழகத்தில் தற்போது தொடர் மின்வெட்டு ஏற்பட்டு, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அரசின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு வந்தோம். தமிழகத்தில் 16,500 மெகா வாட்டிலிருந்து, 17,100 மெகா வாட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் தமிழகத்தினுடைய மின் உற்பத்தி, 12,800 மெகாவாட்டிலிருந்து, 13,100 மெகாவாட்டாகத்தான் இருக்கிறது. இதற்குக் காரணம் தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழக அரசு முறையாக நிலக்கரியை கொள்முதல் செய்யாத காரணத்தினாலும், மத்திய தொகுப்பிலிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய நிலக்கரியை பெறாத காரணத்தினாலும் அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி இல்லாத காரணத்தாலும் அனல்மின் நிலையங்கள் முழுமையாக செயல்படவில்லை.
இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின்தடை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு அரசினுடைய தவறான முடிவுகள்தான் முழுக் காரணம். கோடை காலத்தில் மின்சாரத்தின் தேவையும் அதிகரிக்கும். அதிமுக ஆட்சியில் கோடை காலத்தில் அனல்மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை முறையாக மத்திய அரசிடமிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கொள்முதல் செய்து இருப்பு வைத்திருப்போம். கோடை காலத்தில் தடையின்றி அனல்மின் நிலையங்கள் செயல்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு, மக்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கினோம்.
அதிமுக ஆட்சியில் கோடைகாலத்தில் 17,120 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. அதை முழுமையாக நாங்கள் தடையின்றி கொடுத்தோம். அதனால் மின்வெட்டு இல்லாத ஒரு மாநிலமாக தமிழகம் இருந்தது. 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு நிலவியது. அன்றைய தினம் நிர்வாக திறமையில்லாத ஓர் அரசு ஆட்சி செய்த காரணத்தால், மக்களுக்கு முழுமையாக மின்சாரம் வழங்கப்படவில்லை. தொடர் மின்வெட்டு இருந்தது, இதனால் தமிழகத்துக்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் அனைத்தும் வேறு மாநிலங்களுக்குச் சென்றன. பொருளாதாரமும் பின்தங்கியது. ஒரு நாட்டினுடைய வளர்ச்சி, மின் உற்பத்தியைப் பொருத்துதான் இருக்கிறது.
ஆனால் இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலங்களிலும் திமுக ஆட்சியில் இதே நிலைதான். 2011-ம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா தமிழகத்தை 3 ஆண்டுகளில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றுவேன் என்று கூறினார். அதுபோல அவரது கடுமையான முயற்சியால் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியது. அவரது மறைவுக்குப் பின்னரும் தடையில்லா மின்சாரம் வழங்கினோம். மின்வெட்டு இல்லாத மாநிலமாக உருவாக்கிக் கொடுத்தோம், அதனால் புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வந்தன.
மாணவர்களின் தேர்வுக் காலம் என்பதால் மின்வெட்டால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நகரங்களில் இரவு நேர மின்வெட்டால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அதிமுக ஆட்சியில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தமிழகம் வரை 6 ஆயிரம் மெகாவாட் மின்பாதை அமைக்கப்பட்டது. இதன்மூலம் 4 ஆயிரம் மெகாவாட் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிமுக ஆட்சியின் இறுதிக் காலத்தில் இந்த மின்பாதை அமைக்கப்பட்டது. மின்தடை வருகின்றது எனத் தெரிந்துவுடனேயே அரசு வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்து வழங்கியிருக்கலாம். ஆனால், அரசு அதைச் செய்யத் தவறிவிட்டது.
மே மாதம்தான் காற்றாலை மின்சாரம் கிடைக்கும். ஆனால் இப்போதே ஆயிரம் மெகாவாட் காற்றாலை மின்சாரம் கிடைக்கிறது. அப்படியிருந்தும் மின்வெட்டு ஏற்படுகிறது என்றால், நிர்வாகக் கோளாறு, நிர்வாகத் திறமையற்ற அரசு செயல்படுவதே காரணம்” என்று கூறினார்
இனி வரும் காலங்களில் கோடை வெயில் அதிகரிக்கும்,மின் தேவை அதிகரிக்கும்.எனவே ,அதற்கு ஏற்றவாறு மின் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.அதற்கு தேவையான நிலக்கரியை கையிருப்பு வைத்திருக்க வேண்டும். ஆனால்,நிலக்கரி இல்லாத காரணத்தினால் அனல்மின் நிலையங்கள் மின் உற்பத்தி செய்ய முடியாமல் மின்வெட்டு ஏற்பட்டு,மக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக,மின்வெட்டால் மாணவர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதனைக் கண்டித்து வெளிநடப்ப்பு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.