சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள ஓபிஎஸ், இபிஎஸ் நியமித்த புதிய நிர்வாககள் நியமனம் செல்லாது என்றும், பொன்னையன் பேசியதுபோல மேலும் பல ஆடியோக்கள் வெளியாகும் என எடப்பாடி தரப்புக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
கடந்த 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஓபிஎஸ்-ன் பொருளாளர் பதவி உள்பட கட்சி பதவிகள் பிடுங்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து புதிய பொருளாளராக திண்டுக்கல் வாசனை நியமித்த இபிஎஸ், கட்சியில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். தனக்க ஆதரவானர்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்கி வருகிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியின் நியமன அறிவிப்பை ஏற்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த பரபரப்பான சூழலில், எடப்பாடி அணியில் உள்ள மூத்த தலைவர் பொன்னையன், ஓபிஎஸ் ஆதரவாளரிடம், எடப்பாடி தரப்பைச் சேர்ந்த கேபி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்பட பலரை கடுமையாக விமர்சித்த ஆடியோ ஒன்று வெளியானது. இது சர்ச்சையானது.
இந்த நிலையில் ஆடியோ சர்ச்சையில் சிக்கிய சி.பொன்னையன், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கழக தலைமை நிலையச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 11 பேர் கழக அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தன்னிச்சையாக ஈபிஎஸ் அறிவித்த நிர்வாகப் பட்டியல் கட்சி சட்டப்படி செல்லாது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், கட்சியை வலுப்படுத்தும் வகையில் ஓ.பன்னீர் செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். தற்போது வெளியான ஆடியோ போன்று பல ஆடியோக்கள்விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.