வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பான விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்துவமான வாக்காளர் அடையாள (EPIC) எண் ஒதுக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்ற அறிக்கை மூலம் தவறு நடந்துள்ளதை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஓ’பிரையன், கோஷ் மற்றும் மக்களவை எம்.பி. கீர்த்தி ஆசாத் ஆகியோர் ஒரே EPIC எண்ணைக் கொண்ட வாக்காளர் அடையாள அட்டைகளின் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டனர்.
மேலும் குளறுபடியான இந்த வாக்காளர் அடையாள அட்டைகளில் பெரும்பாலானோர் பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறினர்.
ஒரு மாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அந்த மாநிலத்திற்குள் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்ற நிலையில் இந்த மோசடி வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்போர் வாக்களிக்க மற்ற மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
இதன் மூலம் குறைந்த வித்தியாசத்தில் அந்த தொகுதிகளில் பாஜக கட்சி வெல்வதை உறுதி செய்வதுடன் அந்த மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
இரண்டு மாநிலங்களில் ஒரே EPIC அட்டை எண் இருப்பதை சுட்டிக்காட்டியதை அடுத்து, தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை இந்த சிக்கலை சரிசெய்து தொழில்நுட்பம் சார்ந்த தளத்தை புதுப்பிப்பதாகக் கூறியது.
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்துவமான EPIC எண் ஒதுக்கப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும் என்று கூறியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த விளக்கத்தை அடுத்து EPIC குளறுபடி நடந்துள்ளதை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவே கருதப்படுகிறது.
அதேவேளையில், ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு தனித்துவமான EPIC எண் வழங்கப்படுவதாக 2019ம் ஆண்டு தேர்தல் ஆணையம் கூறியிருந்ததை சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பி வருகின்றனர்.