புனே

வாக்காலர் பட்டியலில் பிரபலங்கள் பெயர்கள் விடுபடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் அதிகாரி மோனிகா சிங் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் வருடம் நடந்த மக்களவை தேர்தலில் பல பிரபலங்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை.   மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் இது போல பலர் பெயர்கள் விடுபட்டிருந்தது.   பிரபல நடிகரும் இயக்குனருமான அமோல் பாலேகர், அவர் மனைவி சந்தியா மற்றும் அப்போதைய காவல் ஆணையர் சதிஷ் மாதூர் உள்ளிட்ட பலரின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறாததால் அவர்களால் வாக்களிக்க இயலவில்லை.

இது குறித்து அமோல் பாலேகர் உள்ளிட்ட சிலர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.   அத வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனவும்  மக்கள் கவனமுடன் சோதனை செய்ய வேண்டியது அவர்கள் கடமை எனவும் கூறப்பட்டது.

இந்த வருடம் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் குறித்த தேர்தல் ஆணைய ஊழியர் கூட்டம் புனே நகரில் தேர்தல் அதிகாரி மோனிகா சிங் தலைமையில் நடந்தது.   அப்போது மோனிகா சிங், “சென்ற முறை நடந்தது போல் இந்த முறை பிரபலங்களின் பெயர்கள் பட்டியலில் இல்லை என்னும் புகார் வரக்கூடாது.

ஆகவே அனைத்து வாக்காளர் பதிவு அதிகாரிகளும் இந்த பட்டியலில் பிரபலங்கள் பெயர்கள் விடுபடாமல் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.   யார் பெயராவது விடுபட்டிருந்தால் அதை உடனடியாக சேர்க்க வேண்டும்.  அத்துடன்   அந்த பெயர்களை உடனடியாக கண்டறிய உதவும்படி பிரபலங்களின் பெயருக்கு நேரே ஒரு குறி இடப்பட வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.