சென்னை:
சென்னை பெருநகர விஸ்தரிப்பு திட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று சுற்றுசூழல் நல அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘சென்னை பெருநகரின் பரப்பளவை ஆயிரத்து 189 சதுர கிலோ மீட்டரில் இருந்து 8 ஆயிரத்து 878 சதுர கிலோ மீட்டராக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் முழுவதும், வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம், நெம்மேலி தாலுகாவையும் இணைக்க முடிவு செய்துள்ளது. இந்த விஸ்தரிப்பு மூலம் நகர மயமாக்கல் மட்டுமே ஏற்படும். ஆனால் ஏற்கனவே சென்னை சுற்றுசூழல் சார்ந்த இயற்கை ஆதாரங்களை இழந்துவிட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில், ‘‘பசுமை குறைவு, காற்று மாசு, வாகன அதிகரிப்பு, முறையற்ற திடக்கழிவு மேலாண்மை போன்ற பிரச்னைகளை அரசு இன்னும் தீர்க்கவில்லை. இந்த விஸ்தரிப்பு திட்டம் மக்கள் தொகை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இதனால் தூய்மை பிரச்னை, நீராதாரங்கள் இழப்பு, தண்ணீர் பற்றாகுறை ஏற்படும்.
விஸ்தரிப்புக்கு முன்பு கல்பாக்கம் அனு மின் குறித்தும், அதன் வெப்ப தன்மை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். சீரான பொருளாதார வளர்ச்சி, மேம்பாடு திட்டங்களை மாநில அரசு ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் சென்னைக்கு குடிபெயர்வதை தடுக்க முடியும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விஸ்தரிப்பு திட்டத்தால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.