உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் “சனாதனத்தை கடைபிடிக்காதவர்களுக்கு” அனுமதி கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை கோயில் நிர்வாகம் எடுத்துள்ளது.

இந்த முடிவை பத்ரி – கேதார் கோயில் கமிட்டி (Badri-Kedar Temple Committee – BKTC) கூட்டத்தில் கடந்த மார்ச் 10 அன்று நிறைவேற்றியதாக அதன் தலைவர் ஹேமந்த் திவிவேதி தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு கோயில்களும் சார் தாம் யாத்திரை எனப்படும் முக்கிய யாத்திரை பாதையின் ஒரு பகுதியாகும். கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டருக்கும் அதிக உயரத்தில் உள்ள இந்த தலங்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்த யாத்திரையை மையமாகக் கொண்டு அந்த மாநிலத்தின் பொருளாதாரத்திலும் மத சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது.

இதற்கு முன்பே, இந்த ஆண்டு ஜனவரியில் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில்களிலும் “சனாதனி அல்லாதவர்களுக்கு” அனுமதி வழங்கக் கூடாது என்று அங்குள்ள புரோகிதர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

“சனாதனி” என்ற சொல்லின் அர்த்தத்தை விளக்கி ஹேமந்த் திவேதி கூறுகையில், “சனாதன தர்மத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர் யாராக இருந்தாலும் அவர் சனாதனி தான். நெற்றியில் குங்குமம் அல்லது திருநீறு அணிந்து ‘சாலிசா’ போன்ற பக்தி ஸ்லோகங்களை சொல்லத் தெரிந்தவர்களும் சனாதனிகள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 2026–27 யாத்திரை ஆண்டுக்காக ₹121.07 கோடி பட்ஜெட்டையும் கோயில் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பத்ரிநாத் கோயிலுக்கு ₹57.47 கோடியும், கேதார்நாத் கோயிலுக்கு ₹63.60 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்த செலவு ₹99.45 கோடி இருக்கும் என்றும், வருவாய் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த பட்ஜெட் வரவிருக்கும் யாத்திரை பருவத்திற்காக தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]