ஜெய்ப்பூர்:

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இளம் தொழில் முனைவோர் 3 ஆண்டுகள் அரசிடம்  அனுமதி  பெற தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சித்தலைவர்  ராகுல் காந்தி கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் ராகுல் காந்தி ஜெய்ப்பூர்  பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது,  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் தொழில் வளர்ச்சியை ஊக்கும் வகையில், 3 ஆண்டுகள் இளம் தொழில் முனைவோருக்கு முழு விலக்கு அளிக்கப்படும் என்றும், அதன்பிறகு அவர்கள் தங்களுக் கான அனுமதியை அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.

மேலும், புதிதாக தொழில் துவங்கும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் பங்கு  முதலீடு வசூலிக்கும் போது, சந்தை மதிப்பீட்டை தாண்டி  வசூலித்திருந்தால் அந்த பணத்துக்கு ‘ஏஞ்சல் டேக்ஸ்’ என்ற  பெயரில் வரி வசூலிக்கப்படுகிறது. இது தொழில் முனைவோர்களுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதாக தெரிவித்தவர், ஆட்சிக்கு வந்ததும் ஏஞ்சல் டேக்ஸ் அகற்றப்படும் என்றும் கூறினார்.

மோடி அரசு அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி காரணமாக நாட்டில் தொழில் வளர்ச்சி நசுக்கப்பட்டு உள்ளது. நாடு பேரழிவை சந்தித்து வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும்  ஜிஎஸ்டியை மாற்றி அமைப்போம் என்றும் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருமானம் வழங்கும் திட்டத்தை அறிவித்த ராகுல் காந்தி, இத்திட்டம் மூலம் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 72,000 ரூபாய் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

“ஏழை குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ. 12,000 வருமானத்தை உறுதிசெய்யும் இத்திட்டம் மூலம் நாட்டின் 20% மக்கள் பயன்பெறுவார்கள். மாதம் 6,000 ரூபாய் சம்பாதிக்கும் குடும்பத்துக்கு அரசு சார்பில் மீதி 6,000 ரூபாய் வங்கிக் கணக்கில் போடப்படும்.” எனவும் ராகுல் தெரிவித்துள்ளார். 5 கோடி குடும்பங்கள் மற்றும் 25 கோடி பேர் இத்திட்டத்தின் கீழ் பலன் அடைவார்கள். உலகில் எந்த மூலையிலும் இதைப்போன்ற திட்டத்தை செயல்படுத்தவில்லை எனவும் பெருமிதம் தெரிவித்தார்.