கன்னோஜ்: உத்திரப்பிரதேசத்தில், கஞ்சா இலையை, சமையலுக்குப் பயன்படும் வெந்தயக் கீரை என்று தவறாக நினைத்து சமைத்து உண்ட 6 பேர் கொண்ட குடும்பம் தற்போது மருத்துவமனையில் உள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; உத்திரப்பிரதேசத்தின் கன்னோஜில் வசிக்கும் நேவல் கிஷோர் என்ற நபர், கஞ்சா இலைகளை, வெந்தயக் கீரை என்று சொல்லி, தனது கிராமத்தைச் சேர்ந்த சக மனிதர் நிதேஷ் என்பவருக்கு கொடுத்துள்ளார்.
அதை அப்படியே நம்பிய நிதேஷ், தன் குடும்பத்தில் கொடுத்து சப்ஜி செய்ய சொல்லியுள்ளார். இதனையடுத்து அந்த கஞ்சா இலைகளை, உருளைக்கிழங்கு இலைகளுடன் சேர்த்து சப்ஜி செய்து, அந்தக் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டுள்ளனர்.
ஆனால், சிறிதுநேரத்திலேயே அவர்களின் உடல்நிலை மோசமானது. உடனே, அண்டை வீட்டார்களை அழைத்து, மருத்துவர்களை அழைக்கச் சொல்லியுள்ளனர். அவர்கள் அனைவரும் மயக்கமடைந்துள்ளனர்.
பின்னர்தான் தெரிந்துள்ளது அவர்கள் சமைத்து சாப்பிட்டது கஞ்சா இலைகள் என்று! அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்பிறகு காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் உண்மை கண்டறியப்பட்டு, அந்த இலைகளை வழங்கிய நேவல் கிஷோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

[youtube-feed feed=1]