டெல்லி: வங்க தேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என அங்கு இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுள்ள யூனுஸிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர்கள் கலவரத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதால், அங்கு பெரும் வன்முறையை ஏற்பட்டது. இதையடுத்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசினா அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து, பங்காலாதேசில் இந்துக்கள் மீதான தாக்குதல் அரங்கேறியது. இந்துக்கள் அடித்துக்கொல்லப்பட்டதும், பல இந்து கோயில்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், பங்களாதேசுக்கு இந்தியா வழங்கிய ஆம்புலன்சுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஐநாவும் பங்களாதேசில் நடைபெற்ற வன்முறையை கண்டித்தது.
இந்த நிலையில், பங்களாதேஷில், இடைக்கால அரசு அமைக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டின் தலைவராக, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முஹம்மது யூனுஸ் பதவியேற்றுள்ளார். முன்னதாக 84 வயதான யூனுஸ், வியாழன் பிற்பகல் டாக்கா திரும்பினார், விமான நிலையத்தில் வங்காளதேச ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் வரவேற்றார். அதைத்தொடர்ந்து,அங்கு நடைபெற்று வந்த தாக்குதல்களை நிறுத்துமாறு அழைப்பு விடுத்த யூனுஸ், சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதே தனது பணி, என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து, அவருக்கு, பிரதமர் நரேந்திர மோடி, வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அங்கு வகிக்கும் “இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி னார்.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தல் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்துக்கள் மற்றும் பிற அனைத்து சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பையும் பாதுகாப்பையும் உறுதிசெய்து, இயல்புநிலைக்கு விரைவில் திரும்புவோம் என்று நாங்கள் நம்புகிறோம். அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான எங்கள் இரு நாட்டு மக்களின் பகிரப்பட்ட அபிலாஷைகளை நிறைவேற்ற வங்காளதேசத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதியாக உள்ளது’, என்று தெரிவித்துள்ளார்.
வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனிஸ் பதவி ஏற்றுள்ளார். இவர், . பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மருத்துவ சிகிச்சையில் இருந்த நிலையில் நாடு திரும்பினார். இதையடுத்து முகமது யூனிஸ் இடைக்கால அரசின் தலைவராக பதவியேற்றார். முகமது யூனுஸ் தலைமையிலான இந்த இடைக்கால அரசில் 16 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த இடைக்கால அரசில் இடம்பெற்றுள்ள 2 மாணவர்கள் அதிக கவனம் பெற்றுள்ளனர். ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைய காரணமான போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் நஹித் இஸ்லாம் மற்றும் ஆசிப் மஹ்மூத். இவர்கள் 2 பேருக்கும் வெறும் 26 வயது தான். இவர்கள் டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள். தியாகிகள் இடஒதுக்கீடுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தவர்களிடம் இவர்கள் 2 பேரின் பங்கு மிகப்பெரியது. இதனால் தான் 2 பேரும் இடைக்கால அரசின் ஆலோசகர்களாகவும், அமைச்சர் பொறுப்பிலும் நியமனம் செய்யப்பட்டனர்.
முன்னதாக, வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,
”தாக்குதல்கள் மற்றும் சிறுபான்மையினரின் நிலைமை குறித்து, இந்த குறிப்பிட்ட பிரச்சினையை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தானாக முன்வந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். சிறுபான்மையினரின் நிலை குறித்தும் நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம். சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய குழுக்கள் மற்றும் அமைப்புகளால் பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. வெளியுறவு அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறியதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
இந்த நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம் ஆனால் சட்டம் மற்றும் ஒழுங்கு கண்கூடாக மீட்கப்படும் வரை ஆழ்ந்த அக்கறையுடன் இருப்போம். ஒவ்வொரு அரசாங்கமும் அதன் அனைத்து குடிமக்களின் நல்வாழ்வை உறுதி செய்வது பொறுப்பாகும் என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். பங்களாதேஷில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீக்கிரமாக மீட்டெடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அங்குள்ள மக்களின் அபிலாஷைகள் மற்றும் நலன்கள் இந்தியாவிற்கும் அதன் மக்களுக்கும் எங்களுக்கு முதன்மையானது. இந்த நோக்கத்தை மனதில் கொண்டு செயல்படுவோம்,” என்று ஜெய்ஸ்வால் கூறினார்.