ராய்ப்பூர்: சாலைப் பாதுகாப்பு உலக டி-20 கிரிக்கெட் தொடரில், இந்திய லெஜண்ட்ஸ் அணி, இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணியிடம் 6 ரன்களில் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பீல்டிங் தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை அடித்தது. கெவின் பீட்டர்சன் அதிகபட்சமாக 37 பந்துகளில் 75 ரன்களை வெளுத்தார். இதில் 5 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகள் அடக்கம்.

பின்னர், களமிறங்கிய இந்திய அணியில், சேவாக், கேப்டன் டெண்டுல்கர் போன்றவர்கள், ஒற்றை இலக்க ரன்களையே எடுத்து விரைவிலேயே ஆட்டமிழந்தனர். ஆனால், பின்வரிசையில் இர்பான் பதான் 34 பந்துகளில் 61 ரன்களை அடித்து நாட்அவுட்டாக இருந்தார்.

மன்பிரித் கோனி 16 பந்துகளில் 35 ரன்களை அடித்தார். அவரும் நாட்அவுட். ஆனாலும், இந்த கடைசிநேர அதிரடி அணியைக் காப்பாற்றவில்லை. இலக்கு மிக அதிகமாக இருந்த காரணத்தால், இந்திய லெஜண்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் மட்டுமே எடுத்து, 6 ரன்களில் தோல்வியடைந்தது.