சென்னை; தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணைகலந்தாய்வு இன்றுமுதல் 7ந்தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் கீழ் சுமார் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, பொறியியல் கல்வி மோகம் குறைந்து வரும் நிலையில், பொறியியல் கல்லூரிகளைத் தேர்வு செய்யும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால் பல பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அக்டோபர் 1ந்தேதி தொடங்கிய நிலையில், பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிவுக்குப்பின், சுமார் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மாணவர் ஒருவர் கூடச் சேரவில்லை என்றும், பல கல்லூரிகளில் மிகக் குறைந்த மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், பொதுக் கலந்தாய்வில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்காக, இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும், ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.