சென்னை: டாஸ்மாக் மதுபான சப்ளை விவரங்களை வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், உச்சநீதி மன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்துள்ளது.

டாஸ்மாக் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கு விவகாரத்தில் டாஸ்மாக் தலைவரான ஐஏஎஸ் அதிகாரி விசாகனிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகளி, தொடர்ந்து, பொது மேலாளர் சங்கீதாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், அந்நிறுவனத்தின் துணை மேலாளர் ஜோதி சங்கரை விசாரணைக்காக ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் பொதுமேலாளர் சங்கீதா நேரில் ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது பல்வேறு தகவல்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை உட்பட 8 மாவட்டங்களில் டாஸ்மாக் கிடங்கிலிருந்து விநியோகம் செய்த மதுபானங்களின் விவரங்களை அமலாக்கத் துறை கேட்டுள்ளது. அதுதொடர்பான விவரங்களை வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே டாஸ்மாக் நிறுவன பொது மேலாளர் சங்கீதா அமலாக்கத் துறையிடம் சில முக்கிய ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலக்கத்துறை சோதனை நடத்தியது.
இதற்கிடையில், அமலாக்கத்துறையினர் டாஸ்மாக் நிறுவனத்தில் நடத்தும் சோதனை மற்றும் விசாரணைக்கு தடை கோரி தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதன் விசாரணையில் தனி நபர்கள் செய்த விதி மீறலுக்காக ஒட்டுமொத்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? என உச்சநீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன், முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனி நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தலாம் என கூறிய நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து ஆணையிட்டனர். மேலும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க அமலக்கத்துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்டனர்.