சென்னை: முறைகேடாக வீடு ஒதுக்கீடு பெற்று சர்ச்சைக்குள்ளான  முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி,  ஜாபர்சேட் மனைவியின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதுபோல ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி  ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது.

1986ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ஜ் அதிகாரியான ஜாபர் சேட் 1990ஆம் ஆண்டு சென்னை கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக காவல்துறையில் தமிழகத்தின் முதன் முறையாக பணியில் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் பல இடங்களில் பணியாற்றியுள்ளார். பின்னர் சிபிசிஐடி டிஜிபியாக பொறுப்பேற்ற ஜாபர் சேட் பல முக்கிய வழக்குகளை கையாண்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சமூக ஆர்வலர் என கூறப்படும் முகிலன் மாயமான வழக்கு, டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு உள்ளிட்ட உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் விசாரண நடத்தியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை டிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.  இதனத்தொடர்ந்து தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்ட அவர், கடந்த 2020ஆம் ஆண்டு காவல்துறை பணியில் ஓய்வு பெற்றுள்ளார்.

இவர்  கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, தமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐஜியாக இருந்தார். அப்போது,  பதவியிலிருந்தபடியே உண்மைகளை மறைத்து வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டை பெற்று பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அவர்மீதும், அப்போது அமைச்சராக இருந்த, தற்போதைய அமைச்சர்   ஐ.பெரியசாமிமீது  கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக  அமலாக்கத் துறையும்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை, கடந்த ஜூலை மாதம் ஜாபர் சேட் மற்றும் அமைச்சர் ஐ.பெரியசாமியிடமும் விசாரணை நடத்தியது.

இதைத்தொடர்ந்து,  தற்போது ஜாபர்சேட்டின் மனைவியின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதுபோல ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான ராஜமாணிக்கத்தின் மகள் துர்கா சங்கரின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது.