ராமராஜ்யம் ஏற்படுத்தவே என்கவுன்டர் நடத்தப்படுவதாக  உ.பி., துணைமுதல்வர் கேசவ் பிரசாத் மயூராவ் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.,யில் அதிகரித்து வரும் என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக அம்மாநில துணைமுதல்வர் கேசவ் பிரசாத் மயூராவிடம்  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் உ.பி.,யில் மட்டும் மேற்கொள்ளப்படவில்லை. கிரிமினல்களை கொல்வது எங்களது  முக்கிய நோக்கம் இல்லை. ஆனால் அவர்கள் காவல்துறையினரை  ஆயுதம் கொண்டு தாக்குவதையும், துப்பாக்கியால் சுடுவதையும் தொடர்கின்றனர். பொது இடங்களில் ஆயுதங்களுடன் நடமாடும் நபர்களை பார்க்க முடிகிறதா? அரசின் இந்த நடவடிக்கையால் முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் திருப்தி அடைந்து, இதனை வரவேற்றுள்ளனர்.” என்றார்.

மேலும், “ராமராஜ்யத்திற்கு வழிவகுக்கவே தீயசக்திகள் அழிக்கப்பட்டு, அமைதியான சூழலை உருவாக்க என்கவுன்டர்கள் நடத்தப்படுகின்றன” என்றார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம்  உ.பி.,யில் பா.ஜ.க., பதவிக்கு வந்தது. இந்த ஒரு வருடத்தில்  மட்டும் 1240 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன. இதில் பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள  40 பேர்  கொல்லப்பட்டுள்ளனர். 305 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.