தென் ஆப்பிரிக்காவுக்கும் மொசாம்பிக் நாட்டிற்கும் இடையே நிலத்தால் சூழப்பட்ட ஆப்பிரிக்க நாடான ஸ்வாடினியில் மன்னராட்சிக்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக மக்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்க நாடாக இருந்த ஸ்வாசிலாந்து (Swaziland) 1968 ம் ஆண்டு விடுதலைபெற்றது, விடுதலை பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் 2018 ம் ஆண்டு ஸ்வாசிலாந்து எனும் பெயரை ஸ்வாடினி சாம்ராஜ்யம் (Kingdom of Eswatini) என்று மாற்றினார் மன்னர் மூன்றாம் ஸ்வதி.

மன்னர் மூன்றாம் ஸ்வதி

முழுமையாக மன்னராட்சி நடைபெறும் ஒரே ஆப்ரிக்க நாடான ஸ்வாடினி மன்னராக மூன்றாம் ஸ்வதி 35 ஆண்டுகளுக்கு முன்னர் பதவியேற்றுக்கொண்டார், 82 ஆண்டுகள் நாட்டை ஆண்ட தனது தந்தை இரண்டாம் ஷோபுஷ் 1986 ம் ஆண்டு மறைந்ததற்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மன்னர் ஸ்வதி இப்போது மக்களின் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார்.

கட்சிகளோ கொடிகளோ இல்லாத நாடாக உள்ள இந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தேடுக்கப்படும் நபர்கள் சுயேட்சைகளாகவே களம் காண வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களில் ஒருவரை பிரதம மந்திரியாக அடையாளம் காட்டுவார் மன்னர்.

12 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 8 லட்சம் மக்கள் இன்னமும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். இருந்தபோதும், மன்னர் தனது 15 மனைவிகளுடனும் 23 குழந்தைகளுடனும் குதூகலமாக வாழ்ந்துவருகிறார்.

இவரது மனைவி மற்றும் குழந்தைகள் பயன்படுத்துவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 19 ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் 120 பிஎம்டபிள்யூ கார்களையும் வாங்கி உலகையே அசரவைத்தார்.

மக்களின் முதுகில் ஏறி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரும் மன்னரின் போக்குக்கும் அடக்குமுறை ஆட்சிக்கும் முடிவுகட்ட நினைத்த மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாரம்பரிய உடையில் மன்னர் மூன்றாம் ஸ்வதி

இந்தப் போராட்டத்தில் இதுவரை 41 பேர் பலியாகி இருப்பதாகவும் 150 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இணையதள சேவையை முற்றிலும் முடக்கி இருக்கும் நிலையில், இதுகுறித்த செய்திகளைச் சேகரிக்க செல்லும் செய்தியாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது.

அந்நாட்டுப் பத்திரிக்கைச் செய்தி

ஜனநாயகம் வேண்டி நடந்து வரும் இந்தப் போராட்டம், 25 வயது மதிக்கத் தக்க சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் போலீசாரின் தாக்குதலுக்குப் பலியானதைத் தொடர்ந்து தீவிரமடைந்திருக்கிறது.

மேலும், மக்களாட்சிக்காக போராடி வருபவர்களை “சாத்தான்கள்” என்று மன்னர் ஸ்வதி கூறியதும் போராட்டத்தைத் தீவிரமடையச் செய்திருக்கிறது. போராட்டத்தின் தீவிரத்தைப் பற்றி கூறுபவர்கள் அநேகமாக இந்நாட்டின் கடைசி மன்னராக இருப்பது இவராகத்தான் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கின்றனர்.

நாட்டை விட்டு மன்னர் ஸ்வதி தப்பியோடிவிட்டதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று அந்நாட்டு அரசு மறுத்திருக்கும் நிலையில், பிரதமர் அம்ப்ரோஸ் ட்லமினியைப் பதவிநீக்கம் செய்துவிட்டு கிளேவ்பஸ் ட்லமினி என்பவரை புதிய பிரதமராக நியமித்திருக்கிறார்.