துபாய்:
துபாயை மையமாக கொண்ட எமிரேட்ஸ் விமான நிறுவனம், ஒரே நாளில் 600 விமான பைலட்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த சிலரும் இடம் பெற்றுள்ளனர்.
பணி நீக்கம் செய்யப்பட்ட இந்திய பைலட்கள் இண்டிகோ விமான நிறுவனத்தில் இணைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள பண நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, அந்த எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிருப்பதாகவும், செய்தி வெளியாகியுள்ளது.
ஊழியர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காகக் குறையலாம் என்று கருதப்படுகிறது. பெருமளவில் பாதிக்கப்பட்ட துறைகளில் விமானப் போக்குவரத்துத் துறையும் ஒன்று. கிருமிப்பரவலுக்கு முன்பு, 4,300 விமானிகளும் சுமார் 22,000 சிப்பந்திகளும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் பணிபுரிந்தனர். 157 நாடுகளுக்கு எமிரேட்ஸ் விமானச் சேவைகளை வழங்கியது.
அந்த நிலையை மீண்டும் அடைய, 4 வருடம் பிடிக்கலாம் என்று எமிரேட்ஸ் நிறுவனத் தலைவர் தெரிவித்தார். திறமைவாய்ந்த ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்ள, துபாய் அரசாங்கம் உறுதியளித்த உதவித்தொகை கைகொடுக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. . ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், சம்பளக் குறைப்பு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிலருக்குச் சம்பளம் 50 விழுக்காடு வரை குறைக்கப்பட்டது.