புதுடெல்லி: கடந்த 1975-77ம் ஆண்டில், காங்கிரஸ் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை ஒரு பிழை என்றுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.
அமெரிக்காவில் உள்ள ‘கார்னெல்’ பல்கலைக்கழக பேராசிரியரும், இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகருமான கவுஷிங் பாசுவுடன், ராகுல் காந்தி வீடியோ கான்பரன்ஸிங் வாயிலாக கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது, “கடந்த 1975 முதல் 1977 வரை, என் பாட்டி இந்திராவால் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி என்பது ஒரு பிழையாகும். அது முற்றிலும் பிழை. அதுகுறித்து, பாட்டி என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார். எனினும் எமர்ஜென்சி காலத்தில் நடந்ததற்கும், தற்போது நம் நாட்டில் நடப்பதற்கும் இடையே பல அடிப்படை வேறுபாடுகள் உள்ளன.
இந்திய நிறுவனங்களின் கட்டமைப்பை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி என்றும் முயற்சித்தது இல்லை. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், அதை செய்வதற்கான திறன், காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. எங்கள் கட்சியின் கட்டமைப்பு அவ்வாறு செய்ய அனுமதிக்காது.
அதை செய்ய நினைத்தாலும் எங்களால் முடியாது. அந்தக் கட்டமைப்பில், ஆர்எஸ்எஸ் அமைப்பு, அடிப்படையில் சில மாற்றங்களை செய்து வருகிறது. நாட்டின் முக்கிய நிறுவனங்களில் தங்கள் ஆட்களை நிரப்பி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு கவிழ்வதற்கு முன்னர், அவர் என்னிடம் ஒன்றைக் கூறினார். ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகள், தன் பேச்சை கேட்காமல் செயல்படுவதாக குறிப்பிட்டார். அரசு நிறுவன கட்டமைப்புகளில் இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. என் தந்தை மரணம், வன்முறை என்றால் என்ன என்பதை எனக்குப் புரிய வைத்தது” என்றார் ராகுல் காந்தி.