டெல்லி: மருத்துவ சோதனை தரவைப் பொருத்து கோவிட்19 தடுப்பூசிக்கான அவசர பயன்பாட்டு அங்கீகாரம் தரப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறி உள்ளார்.
சில நிமிடங்களில் கோவிட் – 19 பாதிப்பைக் கண்டறிந்து முடிவைத் தெரிவிக்க கூடிய, காகித அடிப்படையிலான, செலவு குறைந்த ஒரு தொழில் நுட்பத்துக்கு பெலுடா பரிசோதனை என்று பெயர். கொரோனா தொற்றை கண்டறியும், பெலுடா பேப்பர் ஸ்ட்ரிப் சோதனை அடுத்த சில வாரங்களில் தொடங்கப்படலாம் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறி உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவில் கோவிட் 19 தடுப்பூசிகள் எப்போது கிடைக்கும், எப்போது கிடைக்கும் என்று கேட்கப்பட்டு வருகிறது. அவற்றுக்கு அவசரகால அங்கீகாரம் வழங்குவது குறித்து அரசாங்கம் இதுவரை ஒரு கருத்தையும் எடுக்கவில்லை.
நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தடுப்பூசி ஒப்புதலுக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரவு தேவை. மேலும், தடுப்பூசிக்கான குழுக்களுக்கு முன்னுரிமை அளிப்பது இரண்டு முக்கிய கருத்தாய்வுகளின் அடிப்படையில் இருக்கும்.
ஆரம்பத்தில் தடுப்பூசிகளின் விநியோகம் குறைந்த அளவுகளில் கிடைக்கும். இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில், இறப்பு விகிதம் மற்றும் பல காரணிகளின் அடிப்படையில் தடுப்பூசி விநியோகத்திற்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் முக்கியமானது.
பல வகையான தடுப்பூசிகள் கிடைப்பதை இந்தியா கவனித்து வருகிறது. அவற்றில் சில குறிப்பிட்ட வயதினருக்கு ஏற்றதாக இருக்கலாம். பெலுடா பேப்பர் ஸ்ட்ரிப் சோதனையானது, வணிக ரீதியான அறிமுகத்திற்காக இந்திய மருந்துக்கட்டுபாட்டாளர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று கூறினார்.