சென்னை:

வசரத் தேவைக்காக வெளியூர் செல்பவர்கள், காவல்துறையில் அனுமதி பெற்று செல்லலாம் என தமிழகஅரசு அறிவித்த நிலையில்,  ஏராளமானோர் இ.மெயில் மூலமும், நேரிலும் முற்கையிட்டதைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று செய்தியளார்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது,  பொதுமக்கள் வெளியூர் செல்வது தொடர்பாக இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், பொது மக்கள் வசதிக்காக, விண்ணப்பம் செய்வது எளிமைப்படுத்தப்படும் என்றார்.

இதுவரை 9 ஆயிரம் பேர் வரை இ.மெயில் மூலமாக விண்ணப்பித்து உள்ளதாகவும், பல்வேறு காரணங்களை கூறி அவர்கள் அனுமதி கோரி உள்ளனர், அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது, அவசரத் தேவைகளுக்காக மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பத்தின் உண்மைத் தன்மை தொடர்பாக, இங்கும், அவர்கள் கூறும் காரணங்கள் குறித்து, அந்த பகுதியிலும் காவல்துறை விசாரித்து உண்மைத்தன்மையை கண்டறிந்த பிறகே, அவர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றவர்,

மருத்துவ அவசரநிலை, இறப்பு மற்றும் திருமணம் ஆகிய மூன்று காரணங்களில் மட்டுமே அவசரகால பாஸ் வழங்கப்படும் என்றும் உறுதிப்பட கூறினார்.

மேலும், பொதுமக்கள் வீட்டுக்குள் முகமூடி அணிவது அனைவருக்கும் தேவையில்லை என்று கூறியவர்,  வெளிநாடு பயண வரலாறு உள்ளவர்கள் மற்றும் அறிகுறிகள் உள்ளவர்கள் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ்  நேர்மறையான நிகழ்வுகளுடன் தொடர்பு கொண்டவர்கள், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், முகமூடிகளை அணிய வேண்டும். மற்றவர்கள் வீட்டுக்குள் முகமூடி அணியத் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.